பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரியில்லா வருமானம்

31


கொண்டேயிருந்தார். உத்தியோகஸ்தரின் கண்பார்வை மானேஜர் செய்கையில் விழுந்தது. உடனே, “இதுதானா நீங்கள் வெளியிடும் பத்திரிகை? இங்கே கொண்டாரும். (புரட்டிப் பார்த்துவிட்டு) அடடா! நன்றாயிருக்கிறதே! நான் படித்துவிட்டுத் தரட்டுமா” என்றார். இவரும் ‘சரி’ என்ரறார்.

பத்திரிகை கை மாறியது; கண்சாடை நடந்தது; காரியம் முடிந்தது. பத்திரிகையா லஞ்சமாகக் கொடுக்கப் பட்டது? அதுதானில்லை. அதற்குள்ளே இருந்த ஒரு பச்சை நோட்டுத்தான் அப்படிச் செய்தது.

***

சாதாரண விஷயங்களில் கூட, இந்த ‘ரகசிய சன்மான’த்தைக் காணலாம்.

“மத்தியானப்பூசை ஆகி, கதவு திருக்காப்பிட்டாய் விட்டது. இனி, இப்பொழுது திறக்கமாட்டோம்” என்கிறார் கோயில் அர்ச்சகர்.

“அடடே, அப்படி யெல்லாம் சொல்லக் கூடாது. ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம். அவசியம் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சாயங்கால வண்டியிலேயே ஊருக்குப் போக வேண்டும்" என்கிறார் குடும்ப சமேதராக வந்த அயலூர்வாசி. “அப்படியானால் மூன்று அர்ச்சனைகள் பண்ண வேண்டும். அர்ச்சனை ஒன்றுக்கு இரண்டணா” என்று நிபந்தனை போடுகிறார், வழக்கமாக ஒர் அணா வாங்கும் அர்ச்சகர்.

வந்தவர், “அதற்காக என்ன? இவ்வளவு தூரம் வந்து சுவாமி தரிசனம் செய்யாமலா போவது? சரி” என்று பணத்தைக் கொடுக்கிறார். கதவு திறக்கிறது. அர்ச்சகர் அன்பொழுகப் பேசி, கடைசியில் சன்மானமும் பெறுகிறார் !