பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வாழ்க்கை விநோதம்


ஓர் ஊரிலிருந்து, மற்றோர் ஊருக்கு இரவு நேரத்தில் சாமான்கள் ஏற்றிக்கொண்டு வண்டிக்காரர்கள் சென்றார்கள். நடுவே, ஓர் ஊரைத் தாண்டிப் போக வேண்டியதிருந்தது. அந்த ஊரில் பாதுகாப்பு அதிகம். ஊர்க்காப்பு சங்க அங்கத்தினர்கள் மும்முரமாக வேலை நடத்திவந்தனர்; அவர்கள் வண்டிக்காரர்களை, “நீங்கள் இரவில் வண்டிகளை இங்கேயே அவிழ்த்துப் போட்டு விட்டு, நாளைக் காலையில்தான் போகவேண்டும்” என்று தடுத்தனர்.

அங்கு, திருட்டு அதிகமாய் இருந்ததால், திருடின சாமான்களை, இரவில் வண்டிகளில் ஏற்றிச் சென்றுவிடுவார்கள் என்ற சந்தேகத்தாலேயே அப்படிச் செய்தனர். வண்டிக்காரர்கள் எவ்வளவோ மன்றாடினார்கள்; பயனில்லை. கடைசியில் ஒரு வண்டிக்காரன், “என்ன சாமி, நாங்கள் என்ன பண்ணுவது? இரவு பூராவும் விணாய்ப் போய்விடுகிறது. சம்பளத்துக்குக் காவல் காப்பவர்களாக இருந்தாலும் ஓரணா இரண்டணாக் கொடுத்துச் சரிக்கட்டிப்பிடலாம். உங்களுக்கு நாங்க என்னத்தைக் கொடுக்கிறது ? இல்லை, கொடுத்தாத்தான் வாங்குவீங்களா?” என்றானாம்.

***

உண்மையிலே , லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஆபத்தான சமாச்சாரந்தான். லஞ்சம் கொடுப்பவன், ‘இவர் வாங்குவாரா? அல்லது கோபித்துக்கொள்வாரா?’ என்று ஏங்குகிறான். வாங்குபவனோ, ‘மேலே தெரிந்து விட்டால் வேலை போய்விடுமே!’ என்று பயப்படுகிறான்.

ஆனால் என்ன பயமாயிருந்தாலும், லஞ்சம் பெருகி வளர்வதைப் பார்த்தால், தைரியசாலிகள் பெருகுகிறார்கள் என்றே எண்ண வேண்டியதிருக்கிறது!