பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரியில்லா வருமானம்

61


குமாஸ்தாவாக இருந்தால், அந்த ஆபீஸிலுள்ள பியூனைக்கேட்டு லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. மானேஜராயிருந்தால், அவருடைய கார் டிரைவரைக் கேட்க வேண்டியதிருக்கிறது. பெரிய அதிகாரியாக விருந்தால், இதற்குமுன் அவர் லஞ்சம் வாங்கிய துண்டா என்று அவருடைய பூர்வ சரித்திரத்தை அறிய வேண்டியதிருக்கிறது.

***

எனக்குத் தெரிந்த ஒருவர், ஒரு கூட்டத்தில் லஞ்சத்தைப் பற்றிப் பிரமாதமாகப் பேசி, “லஞ்சம் வாங்குவது மிகவும் மோசமாகும். அது, அயோக்கியர்கள் செய்யும் வேலை” என்று முடித்தாராம். கூட்டம் முடிந்ததும் அநேகர் இவருடைய பேச்சுக்கு மெச்சி, மேடை மீது வந்து கை கொடுத்தனராம்.

“இப்படிக் கை கொடுத்தவர்கள் எல்லாம் இரண்டு கையாலும் லஞ்சம் வாங்கித் தின்று கொழுத்தவர்கள்” என்றார், எனது நண்பர்.

“ஏன், கை கொடுக்கும் போதே, அவர்கள் லஞ்சம் வாங்குபவர்கள் என்று, அவர்கள் கைகளே சொல்லி விட்டனவோ ?” என்று கேட்டேன்.

“இல்லை. இவர்களெல்லாம் லஞ்சம் வாங்காத பரம யோக்கியர்கள் என்று, கூட்டத்தில், இருந்தவர்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். அதனால்தான் இப்படி முந்திக் கொண்டு கை கொடுக்க மேடைக்கு வந்தனர். இவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே !” என்றார்,

கை கொடுக்கும் போதே, என் நண்பர், இவர்களைக் கையோடு பிடித்துவிட்டார். ஆனாலும் , விட்டுவிட்டாரே! ஆமாம், அவரால் என்ன செய்யமுடியும், மனச்சாட்சியை விற்பவர்களுடன் ?