பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டெலிபோன் ஏமாற்றம்

67


பிறகு “அடடா. மன்னிச்சுக்கணும் சார், மன்னிச்சுக்கணும். டெலிபோன் டைரக்டரியில் கீழேயிருக்கும் நம்பரைக் கூப்பிடவேண்டியதற்குப் பதிலாகத் தங்களைக் கூப்பிட்டுவிட்டேன். மன்னிச்சுக்கணும் சார்” என்று பதில் வந்தது.

முதலியார் மன்னிக்காமல் என்ன செய்வது ? நாணயமாக உள்ள முதலியாரை, இந்தப் போன் கொஞ்சம் முன்னால் என்ன பாடு படுத்திவிட்டது ?

***

ஒரு நாள் , எங்கள் ஆபீஸ் டெலிபோன் மணி அடித்தது. அதை எடுத்து அதன் அழுகையை நிறுத்திப் பேச ஆரம்பித்தேன். ஆபீஸில் வேலை பார்க்கும், தெலுங்கு தேசத்தவர் ஒருவரைக் கூப்பிடும்படியாக அந்தக் குரல் வேண்டிற்று. தெலுங்கு தேசத்தவரைக் கூப்பிடப் போனேன். அவர் இடத்திலில்லை. காரணம் அவர் லீவில் இருக்கிறாராம். விஷயத்தைக் கூறலாம் என்று போனை எடுத்தேன். நான் பேசுவதற்குள் அந்தக் குரல் “ஏமுண்டி. நமஸ்காரண்டி......” என்று ஏதோ தெலுங்கில் பேச ஆரம்பித்துவிட்டது!

நானோ சுத்தத் தமிழன்; தெலுங்கு தெரியாது. ஆனால் இதை நான் தெரிவிக்காதபடி அந்தக் குரல் வெகுநேரம் பேசிவிட்டுப் பதிலை எதிர்பார்த்தது. அப்போதுதான் நான், “ஐயா, நீங்கள் கேட்ட ஆள் லீவில் இருக்கிறாராம். நாலைந்து நாள் செல்லுமாம் வருவதற்கு” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

இந்த மாதிரியே போனில் எத்தனையோ தமாஷ்கள் நடந்துவிடுகின்றன. சில ஆபத்தாக முடியும் ; சில ஏமாற்றமாக முடியும். ஆனால், இதைக் கேட்பவர்களுக்கோ எப்போதும் ரசமாகத்தான் இருக்கும்.