பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வாழ்க்கை விநோதம்


‘12A’ என்ற வீடு இருக்கும்; அதற்கு அடுத்தது 14-ஆம் நம்பர் வீடுதான்; 13-ஆம் நம்பர் வீடு இருக்காது ! அப்படி யிருந்தாலும், அந்த வீட்டுக்குக் குடிவருகிறவர்கள், அதை மாற்றி ‘12.A’ என்று எழுதிவிடுவார்களாம்!

பெரிய பெரிய மாலுமிகள், ஆகாய விமானிகளெல்லாம் 13-ஆம் தேதியன்று புறப்படமாட்டார்களாம். 13-ஆம் தேதியுடன் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து கொண்டால், நிச்சயம் புறப்படவே மாட்டார்கள்.13-ஆம் தேதி,வெள்ளிக்கிழமை, அதுவும் 13 பிரயாணிகளுடன் புறப்பட வேண்டியது வந்துவிட்டால், வேலையே போவதானாலும் சரிதான்; புறப்படமாட்டார்களாம்.

கிழமையிலே வெள்ளிக்கிழமையையும், தேதியிலே 13-ஆம் தேதியையும், அவர்கள் வெறுத்து விலக்குவது போலவே, மாதத்திலே மே மாதத்தையும் அவர்கள் வெறுக்கிறார்கள்.

இந்த நம்பிக்கைகளோடுமட்டும் வெள்ளைக்காரர்கள் நிற்கவில்லை. இன்னும் என்ன என்னவெல்லாமோ நம்பிக்கைகள் அவர்களிடம் இருக்கின்றன.

அறைக்குள்ளே குடையை விரிக்கக் கூடாது. மேஜைமீது இரண்டு கத்திகளை ஒன்றை ஒன்று குறுக்கிடும்படி வைக்கக்கூடாது. ரொட்டியைக் கத்தியில் குத்திக்கொண்டு வறுக்கக் கூடாது. 2 பேர் ஒரே கோப்பையில் கை கழுவக் கூடாது. (அப்படிக் கழுவினால், இருவருக்கும் சீக்கிரத்தில் சண்டை வந்துவிடுமாம்!) ஏணியைச் சுவரோடு சாய்த்து வைத்திருக்கும் போது, சுவருக்கும் ஏணிக்கும், இடையே போகக் கூடாது. இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ!