பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


அன்று கிழவிக்கு, வழக்கமான வேலை கிடைத்து விட்டது—வண்டி யோட்டி வரதன், அந்தப் பக்கத்திலே ‘பஸ்’. ஏற்பட்டு விட்டதால், நொடித்துப் போனான்—ஆகவே வண்டி ஓட்டும் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு, ‘அக்கரை’ போகத் தீர்மானித்து விட்டான்—அவனிடம் ‘கடுதாசி’ கொடுத்தனுப்பும் வேலை, கிழவிக்கு.

“அவ குலுக்கி மினுக்கித் திரியும்போதே எனக்குத் தெரியும், அவ கெட்டுப் போவா என்பது” என்று கூறுவார்கள் தலை நரைத்தவர்கள், வள்ளியைப்பற்றி—வள்ளி தவறியவள்!

ஆடு வெட்டி ஆண்டியப்பன் தாலி கட்டி வள்ளியைப் பெறவில்லை—தாலி கட்டிய தாண்டவன் காலமான பிறகு வள்ளி நெல் குத்தி ஜீவித்து வந்தாள். பக்கத்துக் கிராமத்திலே நெல் அரைக்கும் யந்திரம் அமைத்த பிறகு, அவளுக்குப் பிழைப்புக்கு வழி அடைத்துப் போய்விட்டது—ஆண்டியப்பன் அவளை ஜாடைமாடையாகக் கவனிக்க ஆரம்பித்தான்—வள்ளி, “நாசமாப் போவான்—மாரி சரியானகூலி கொடுக்கப் போகிறா பார்”—என்று சபித்தாள்—அவன் அஞ்சவில்லை—அவள், “அண்ணேன்” என்று முறை கொண்டாடி, அரை, கால் கடன் கேட்டுப் பெற்று வந்தாள், அவன் வட்டி கேட்கவில்லை, அசலைப்பற்றியும் கவலை காட்டவில்லை—அவள் புரிந்துகொண்டாள்—வெறுப்பாக இருந்தது—ஆனால் எவ்வளவு காலம் வறுமையுடன் போராடமுடியும்—“ஐயயோ! வேணா முங்கோ” என்று கெஞ்சும் குரலில் தொடங்கி,“எப்பவும் கைவிடமாட்டாயே!” என்று கொஞ்சும் குரலில் முடிந்தது, அவளுடைய வீழ்ச்சி !

வள்ளிக்கு, நாலு எழுத்து எழுதப்படிக்கத் தெரியும்.
அவளிடம் சென்று, ஆயிரம் கண்ணே! கற்கண்டே! போட்டு, கிழவி எழுதச் சொன்னாள்.