பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


'சிரஞ்சீவி மணிக்கு"
காளியாயி கடாட்சத்தாலே நான் இன்னமும் உசிரை வச்சிக்கிட்டுத்தான் இருக்கிறேன் நான் ஒருத்தி இருக்கிறேன் என்கிற நினைப்பே உனக்கு மறந்து போச்சா. உன்னைக்கண்ணாலே கண்டுவிட்டுச் செத்துத் தொலைக்கத்தான் நான் காத்துகிட்டு இருக்கிறேன். கேவலம் ஒரு பிச்சைக்காரி போல இருக்கறேன். நாலு நாளைக்கு ஒரு தடவை கூடச் சோறு கிடையாது. நான் இப்பவோ பின்னையோன்னு இருகிற இந்தச்சமயத்திலேகூட நீ ஊர்திரும்பாம இருக்கறது தர்மமா! ஒரே ஒரு தடவை வந்துபோ. உன்னைக் காணவேணும் என்கிற ஆசை என்னைக் கொல்லுது நான் கண்ணை மூடறத்துக்குள்ளே, ஒருமுறை பார்த்தாகணும்.இங்கே நான் அனுபவிக்கிற தரித்திரம் சொல்லி முடியாது. ஒரு அஞ்சோ பத்தோ அனுப்பினா, நாலைந்து கோழிவாங்கி வளத்து, முட்டைவித்து பிழைச்சிக்கலாம்-நான் சாப்பிட்டது போக மிச்சம் கூடக் கிடைக்கும் பனிக் காலத்திலே உடல் வெடன்னு ஆடிப் பிராணனே போயிடற மாதிரி ஆயிடுது. ஒரு கம்பளிப்போர்வை அனுப்பினா நல்லது.
கிழவி சொல்லிக்கொண்டே வந்தாள்-வள்ளி எழுதிக்கொண்டே இருந்தாள்.
"இன்னும் என்ன எழுதணும்-பெரிய பாரதமே எழுதியாச்சி-” என்று சலித்துக்கொண்டாள் வள்ளி.
"கண்ணு! இன்னும் ஒரே ஒரு சங்கதி எழுதிடு" என்று கெஞ்சினாள் கிழவி.
"சொல்லித் தொலை" என்றாள் வள்ளி.
கிழவி சொல்லத் தொடங்கினாள். உன்னாலே பணம் காசு அனுப்ப முடியாவிட்டாலும் பரவாயில்லை. நீ இங்கே வந்து சேர்ந்தா போதும். உன்னைக் கண்ணாலே பார்த்தாலே என் கஷ்டம் அத்தனையும் தீர்ந்து போகும் அடுத்த கப்பலுக்கே பொறப்படு."