பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


வள்ளி, கட்டாயப்படுத்திக் கிழவியை முடிக்கச் சொன்னாள்.

கடிதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் கிழவி, வரதன் குடிசைக்கு.

இதுபோல எத்தனை முறை அனுப்பினோம்—எவ்வளவு உருக்கமான கடிதங்கள்—எத்தனை சாமிமீது ஆணையிட்டு எழுதினோம்—ஏனோ அவன் மனம் துளி இரங்கவில்லை—இந்தத் தள்ளாத வயதிலே என்னைத் தவிக்க விட்டுவிட்டு, அக்கரையிலே சுகமாக இருக்க, எப்படித்தான் அவனுக்கு மனம் வந்ததோ—என்றெல்லாம் எண்ணியபடி கிழவி சென்றுகொண்டிருந்தாள்.

கடிதங்களைப் படிப்பதேயில்லையா—படித்துப் பார்த்தால், பகையாளியாக இருந்தால்கூடப் பரிதாபம் பிறக்குமே.

சரியாகப் படித்திருக்கமாட்டான்—ஒரு கணம் உருகுவான், மறுகணமே மறந்துவிடுவான்—விளையாட்டுச் சுபாவம்—அல்லது வேலை அவ்வளவு கடினமோ, கடிதம் போடக்கூட நேரம் கிடைக்காதோ—என்ன மாயமோ என்ன மர்மமோ, என்று எண்ணிக் கொண்டே சென்றாள்.

“பாட்டியம்மா! பாதை ஓரமாப்போ எதிரே காளைமாடு வருது........” என்று அன்புடன் கூறினான், கிராமத்துக்குப் புதிதாக வந்து குடியேறிய பாதிரியப்பன்.

கிராமத்தில் வைத்யசாலை நடத்திக் கொண்டு, பச்சிலைகளைச் சேகரித்து ஏதோ ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தான். பாதிரியப்பன். கிராமத்தில் நல்ல மதிப்பு. கிழவியைப் ‘பாட்டியம்மா’ என்று அழைக்கும் ஒரே ஆசாமி, பாதிரியப்பன்தான்.

“டாக்டரய்யாவா” என்று கேட்டுக் கொண்டே, அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் கிழவி. அவ-