பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

போய்ச் சேர்ந்திருக்காது. அந்தக் கோபம் என் மகனுக்கு. அதனாலேதான் காலணா கடுதாசிகூட அவன் போடல்லே, டாக்டரய்யா! இப்படி ஒரு கிழவியை ஏமாத்தலாமா. நீங்களே சொல்லுங்க, இது தர்மமா"
"வருத்தப்படாதீங்க பாட்டியம்மா- சாயந்திரமா வீட்டுக்கு வாங்க, நான் கடிதம் எழுதித் தருகிறேன்"
டாக்டரை வாழ்த்திக்கொண்டே கிழவி தன் குடிசைப் பக்கம் சென்றாள்.
வள்ளி வீட்டுக்குப் பாதிரியப்பன் சென்று, சற்றுக் கோபமாகவே கண்டித்தான்.
அது ஒரு பைத்யம் டாக்டரய்யா! நான் மட்டுமில்லை, நம்ம கிராமத்திலே யாருமே, கிழவி கடுதாசி எழுதச் சொன்னா, எதையாவது கிறுக்கித் தருவாங்க. அதுக்கு மூளை சரியில்லை; அதனாலே, இப்படி ஓயாம, கடுதாசி எழுதிக்கொடு கொடுன்னு, உசிரை வாங்கும். அதனாலேதான் நான் கோலம் போட்டேன். தப்பா எண்ணிடாதிங்க. அக்கரையிலே அதுக்கு மகனும் இல்லை, மகளும் இல்லை அவன் எப்பவோ செத்துப் போயிட்டிருப்பான்-உயிரோடு இருந்தா இத்தனை காலமுமா ஒரு காலணா கடுதாசி போடாதிருப்பான். இங்கே இது பைத்யம் பிடித்துப் போயி, இப்படித் தலைவிரிகோலமா இருக்குது. டாக்டரய்யா. நீங்க ஒண்ணும் வித்யாசமா எண்ணிடாதிங்க. அது பைத்யம்' என்று வள்ளி சமாதானம் கூறினாள். டாக்டருக்குத் திருப்தி ஏற்படவில்லை.
"என்ன காரணம் சொன்னாலும், நீ செய்தது தப்பு வள்ளி - ஒரு தள்ளாத கிழவியை இப்படி ஏமாத்துவது பாபம்" என்றார்.
"ஐயோ, ஐயோ........நீங்க ஒரு உலகம் தெரியாதவரு.... அந்தக் கிழத்துக்குப் புத்தி பேதலிச்சுப் போயிருக்குதுங்க. அதுக்கு மூளை சரியா இருந்தா ஏன் அக்கரைபோனவனை நினைச்சிகிட்டே கிடக்