பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கோணும், இப்படி, ஐயா! அம்மான்னு பிச்சை எடுத்துப் பிழைக்கவேணும்-மலையாட்டம்மா இருக்கிறானே மற்றொரு மகன் - அவனோடு போய் இருந்துகிட்டு, வயிறாரச் சாப்பிடக்கூடாதா நிம்மதியா கிடக்கலாமே" என்றாள்.
"மற்றொரு மகனா? கிழவிக்கா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பாதிரியப்பன்.
"நீங்க கிராமத்துக்கு புதுசுதானே தெரிந்திருக்காது. கிழவிக்கு இன்னொரு மகன் இருக்கிறான்- பெரிய அந்தஸ்து இல்லைன்னாலும், வயிறார கஞ்சி ஊத்தக் கூடியவன் தான் -சமுசாரி- அடுத்த கிராமத்திலே இருக்கறான் சன்னாசின்னு பேரு...... என்று விவரம் கூறிக்கொண்டே இருக்கும்போது, தொலைவிலே ஆண்டியப்பன் வருவதைக் கண்டு, "அதோ அது வருது மூக்குமேலே கோபம் அதுக்கு. நாம்ப களங்கமத்து பேசிகிட்டு இருந்தாக்கூட, என்னமோ ஏதோன்னு சந்தேகப்பட்டுகிட்டு சண்டைக்கு வந்து தொலைக்கும். நீங்கபோய் வாங்க டாக்டரய்யா- பக்கத்து கிராமம் - சன்னாசி- அவனையே கேட்டுப் பாருங்க, கிழவியோட சமாசாரம் புரிந்துபோகும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
சன்னாசி பெரிய குடும்பஸ்தன்-நாணயமானவன்
பெரிய வைக்கோற்போரை கொண்டிருந்தான்,டாக்டர் அவனைப் பார்க்கச் சென்றபோது!
ஆமாங்க! என் மானத்தை வாங்கவே அந்தக் கிழம் அப்படிச் செய்து, தலை இறக்கமாத்தான் எனக்கு இருக்குது. தடியாட்டம்மா நான் இருக்கிறேன் சோத்துக்குத் துணிக்குக் குறைச்சல் கிடையாதுங்க- இங்கேவந்து விழுந்து கிடன்னு ஆயிரம் தடவை வந்து கெஞ்சி கேட்டாச்சிங்க, ஒரே பிடிவாதமா வரமாட்டேங்குது - அங்கே பட்டினிகிடக்குது- பிச்சை எடுக்குது - எனக்கு அவமானம் தாங்கமுடியலிங்க"