பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அதனாலே தான், பொறந்த மூணாமாசமே அவனை என் தங்கச்சிக்குத் 'தத்து' கொடுத்து விட்டேன்.'
"பாட்டி! உனக்கு மூத்தமகன் அக்கரைபோயிட்ட துக்கத்தாலே மூளை குழம்பியிருக்கு......."
கேள் டாக்டரய்யா....... மூளையாவது குழம்பறதாவது...... மணி பொறந்து அஞ்சு வருஷத்துக்குப் பிறகு, இவன் பொறந்தான்.. இவன் என் வயித்திலே கரு தரிக்கிறதுக்கு ஒரு வருஷத்துக்கு முந்தி, என்னை திருக்குளத்துப் பேய் பிடிச்சிடுச்சி, பேயை ஓட்ட 'அவரு' படாதபாடுபட்டாரு- செலவு கண்மண் தெரியாமச் செய்தாரு-அந்தப் பாழாப்போன பேய் ஒழியமாட்டேன்னு சொல்லிடிச்சி. சூடு வைச்சிப் பாத்தாங்க, தலைமுழுக்கு: வேப்பஞ்சேலை கட்டி மாரியம்மன் கோயிலிலே சுற்றி வர்ரது, ஒண்ணு பாக்கியில்லை, திருக்குளத்துப் பேய் எதுக்கும் மசியல்லே. எனக்குப் பேய் பிடிச்சிருந்தபோதுதான் கரு தரிச்சுது, இந்தப் பொறந்தான் - அவனைத்தான் நீங்க பார்த்தீங்களே இலட்சணமாயிருப்பான்- அவன் பொறந்ததும், ஊர்க்கோடியிலே இருந்த ஒரு பிரம்மாண்டமான புளியமரம் வேரோடச் சாய்ந்து கீழே விழுந்தது...இடி இடிச்சி, மாரியம்மன் கோயில் கோபுரத்திலே விழுந்து, அதை இடிச்சித் தள்ளிவிட்டுது, எங்க வீட்டிலே இரண்டு படி கறக்கும் அருமையான பசுமாடு, அது 'காவ்காவ்'னு கத்திகிட்டே கீழே 'தொபீல்னு' விழுந்து செத்துப்போச்சு, அப்பப்பா! அவன் பொறந்ததும் ஊருக்கே பெரிய ஆபத்துன்னு வையுங்களேன், அப்படியெல்லாம் நேரிட்டுது.
இதோடு போச்சா; அவரு, அவங்க அப்பாரு, நல்லா இருந்த மனுஷனுக்குக் காச்சல் கண்டு, வாயிலே 'நொப்பும் நொரையும் தள்ளி, கைகால் இழுப்பு வந்துடிச்சி. எனக்குப் பயம், சந்தேகம், துக்கம் பூஜாரியைக் கூப்பிட்டு, என்னய்யா இதுன்னு கேட்டேன், "எல்லாம் திருக்குளத்துப் பேய் செய்கிற