பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


என்ன செய்வான் பாதிரியப்பன், பேயாவது பூதமாவது, சாபமாவது என்று சொன்னால், கிழவியால் நம்பமுடியுமா! பல கலை வல்லவர்களே அந்தமயக்கத்திலிருந்து விடுபட முடியாது தவிக்கிறார்கள்-இந்த கிழவிக்கு 'பகுத்தறிவு' வாதம் செய்து காட்டி, பேய் பூதம் பிசாசு என்பதெல்லாம் கட்டுக்கதை, பூஜாரி ஒரு புரட்டன், அவன் சொன்னது அத்தனையும் அர்த்தமற்றது, என்று ஒப்புக்கொள்ளும்படி எப்படிச் செய்யமுடியும். ஆக்ஸ்போர்டும் கேம்ப்ரிட்ஜும் படித்துவிட்டு, மனைவிமார்களை அரசமரம் சுற்றிவரச் செய்வதற்கு, அமெரிக்கன் மாடல் மோட்டாரில் அனுப்பி வைக்கிறார்கள். இந்த கிழவிக்குப் பகுத்தறிவு புகட்டவா முடியும்!
'பாட்டி! எவனோ ஒரு மூடன் சொன்னதை நம்பி,நாசமாகித் தொலைக்காதே" என்று கூறினார்.
"மூடனா! யாரைச் சொல்கிறாயப்பா பூஜாரியையா ! சேச்சே! அவனுக்கு, ராமாயணம், பாரதம், கந்த புராணம் எல்லாம் மனப்பாடம். ஜோதிடம் தெரியும். இந்தப் பக்கத்திலேயே, ரொம்பக் கியாதி அவனுக்கு" என்று கிழவி கூறிவிட்டு, ஏன் இந்தக் காலத்திலே, இதை எல்லாம் நம்ப மறுக்கிறார்கள் என்று எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டாள்.
என்ன செய்வதென்று தெரியாமல் சிலைபோலானார் டாக்டர்.
“டாக்டரய்யா! என் வினை அது, அதுக்கு யார் என்ன செய்ய முடியும். விட்டுத் தள்ளுங்க. நீங்க வீண் பொழுத ஓட்டாமபடிக்கு. ஒருகடுதாசி எழுதிக் கொடுங்க, என்று கெஞ்சினாள்
டாக்டரின் கண்களிலே நீர் கசிந்தது- கோபமும் கொப்பளித்துக்கொண்டு வந்தது,
ஆனால், யார்மீது கோபித்துக்கொள்வது?


  • 30-1-55 திராவிடநாடு இதழில் வெளிவந்தது