பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வாழ்வில்....

வறுமை, எத்தகைய கோலத்தைத் தரமுடியும் என்பதை எடுத்துக் காட்டவே, அந்த மூதாட்டி விட்டு வைக்கப்பட்டிருக்கக்கூடும்! காலதேவன் எத்தனையோ வண்ண மலர்களை, அழகான அரும்புகளைக்கூட அழித்தொழித்துவிட்டு, இந்த ‘எலும்புக் கூடு’ உழல அனுமதிப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்! வெறும் சருகு! அதற்குக் காலும், கையும், கண்ணும், அம்மட்டோ, பாழும் வயிறும்!!

அந்தக் காய்ந்த வயிறுக்கு யாராவது ‘புண்யவதி’ புளித்த கஞ்சி தந்துவிட்டால், பெரிய விருந்துதான்!! விருந்து, இரண்டு நாளைக்கு ஒரு தடவை கிடைக்கும் புண்யவதியை அவள் புருஷன் கொடுமைப் படுத்தாதிருந்தால்!!

மற்ற நாட்களில், தண்ணீர், காற்று அதிகமாக ஏற்றுக் கொள்ளவும் கிழவிக்குச் சக்தி இல்லை—பட்டினியோடு நீண்டகாலமாகப் பழகிவிட்டதால்! கிழவியின் கண்களிலே, நீர் வருவது நின்று, நெடுநாட்களாகிவிட்டன !

இரண்டு, குழிகள்! அவ்வளவுதான்! கண்களாகத்தான் அவை முன்பு இருந்தன!

மைகூடத் தீட்டி அழகு பார்த்ததுண்டு—ஆனால் அது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு—‘அவர்’ இருந்தபோது.

அவர் தந்த செல்வம் ‘அக்கரை’ சென்று ஆண்டு இருபதுக்கு மேலாகி விட்டன—அரும்பு மீசைக்காரனாகச் சென்றான்—அன்னை அப்போது அழ முடிந்தது—இப்போது? அதற்கும் சக்தி வேண்டுமே, இல்லை!'