பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


துக்கம்—ஏக்கம்!
நிலைத்துவிட்ட திகைப்பு!
தரித்திரத்தின் கடைசிக் கட்டம்!!

இவைகளின் ‘நடமாடும்’ உருவம், அந்த மூதாட்டி கிழவியைக் கண்டால், “ஐயோ பாவம்!” என்று பரிதாபம் பேசிய காலம்கூட மடிந்து போய்விட்டது—எத்தனை நாளைக்குத்தான், பரிதாபச் சிந்து பாடியபடி இருக்கமுடியும் !!

மலையின் கெம்பீரம் — மதியின் அழகொளி — மேகக் கூட்டத்தின் மோகனம் — இவைப்பற்றியே, பேசிக்கொண்டும், ரசித்துக்கொண்டும், சதா சர்வ காலமும் இருக்க முடிவதில்லையே, இந்தச் சஞ்சல மூட்டையைப்பற்றியா, சிந்தனையை எப்போதும் செலவிட்டபடி இருக்கமுடியும்!

‘பாட்டியம்மா’ ‘பாட்டி’ ஆகி, பிறகு ‘கிழவி’யாகி பிறகு ‘ஏ! யாரது!’ ஆகி, பிறகு ‘போ! போ!’ என்றாகி, பிறகு, ‘இதேதடாதொல்லை’ என்றாகி, ‘பெரிய சனியன்’ என்றாகி, ‘பிசின், இலேசில் விடாது’ என்றாகி இப்போது, கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகிவிட்ட நிலை!!

சுவரிலே இருக்கும் சித்திரத்தோடு யார் பேசுகிறார்கள்!

ஆனால், கிழவியோ, யார் கிடைத்தாலும் விடுவதில்லை!

பசி—பட்டினி—இதைக் கூறவா? அல்ல, அல்ல! யார் போவது......... அப்பா........அடி அம்மா....... அலமேலா.... ஆண்டியப்பனா.......யாரடாப்பா........

நான்தான்...... என்ன, என்னா....... வீட்டுக்குப் போ....... வள்ளி இருக்கா தண்ணி கொடுப்பா.........

ஆண்டியப்பன் தானா.... டே அப்பா! எனக்குத் தண்ணியும் வேணாம், சோறும் வேணாம், சொக்கி கூழ்-