பக்கம்:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


கொடுத்தா; போதும்............ ஒரு கடுதாசி எழுதிக் கொடுடா அப்பா்............கோடித் தெரு கோபாலன், ‘அக்கரை போறானாமே’ அவனிடம் கொடுத்தனுப்பனும் வாடா அப்பா........ புண்யம்டா உனக்கு...... ஒரு நாலுவரி எழுதிக் கொடு்............

ஆண்டியப்பனுக்குக் கிழவி கூறப்போவது தெரியும்—அவன் சென்று விட்டான், வேகமாக—‘வேறே வேலை கிடையாது இந்தப் பைத்தியத்துக்கு’ என்று முணுமுணுத்தபடி.

எதிரிலேயும், பக்கவாட்டங்களிலும் தடவிப் பார்த்துப் பார்த்து, ஒரு உருவமும் கையில் தட்டுப் படாததல், கிழவிக்கு அவன் போய்விட்டான் என்பது தெரிந்தது. என்ன அவசரமான வேலையோ பாவம்!—என்ற எண்ணம் கிழவிக்கு—கோபமல்ல!

கோபம், குடிபுக, அந்த மூதாட்டியின் நெஞ்சிலே இடம் ஏது! சோகம் கப்பிக்கொண்டிருந்தது!!

‘அக்கரை’யில் மூதாட்டியின் மணி!!

இங்கு இந்த எலும்புக் கூடு!!

இடையே, நாடு, காடு, மலை, வனம், வனாந்திரம், கடல்!!

எண்ணம், விநாடியிலே எதையும் தாண்டும், எலும்புக்கூடு. எங்கே அந்தச் சக்தியைப் பெறுவது! புதைகுழிக்குச் செல்லவே சக்தியில்லை!

யாராவது கிடைக்கமாட்டார்களா, என்று தேடித் தேடி அலுத்துப்போய், தன்குடிசையில் போய்ச் சுருண்டு விழுந்துவிடுவது வாடிக்கை.

சொந்தக் குடிசைதான்!!

அது வேறு யாருக்கு வேண்டும்?—அதனால் கிழவியிடமே, இருந்தது!