பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 17

சிரித்துவிடுவார். அப்புறம் வீதியில் போவோரெல்லாம் "வாத்தியாருக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டுப் பரிதாபப்படுவார்கள். -

முன்பு மதுரைப்பல்கலைக்கழகத்தில் ஒரே இடத்தில் ஆசிரியர்களைக் கூட்டி வைத்துத் தேர்வுத் தாள்களைத் திருத்தச் சொல்லும் வழக்கம் இருந்தது. அப்போது ஆசிரியர்கள் தங்களுக்குத் தனித்தனியே கிடைத்த பேரின்பத்தை மற்றவர்களோடு சமமாய்ப் பங்கிட்டுக் கொள்வார்கள். 'என் மாணவன் என்ன அழகாய் எழுதுகிறான் பாருங்கள். கேவலன் மாதவி வீட்டில் தன் அஸ்தியைக் கரைத்தான்....இப்படிச் சொன்னதும் அந்த மாணவரின் தனக்குவமையில்லாத தாளைப் பார்க்க ஒவ்வொருவராக ஓடிவருவார்கள். பார்த்துவிட்டு விதவிதமாகச் சிரிப்பார்கள். திடீரென்று ஒருவர் அந்த மாணவரின் திருவாசகத்துக்கு நயம் சொல்வார். "பையன் உணர்ச்சியுள்ளவன் ஐயா, மனைவி இருக்கும்போது இன்னொருத்தியைக் கோவலன் நாடிப்போனதை அவனால் சகிக்க முடியவில்லை. கேவலமான காரியத்தைச் செய்ததால் கேவலன் என்று அவன் பெயரை மாற்றி வைத்துவிட்டான் ஐயா... மன்னர் நெடுஞ்செழியன் கோவலன் தலையை வாங்கினான். நம் மாணவன் நெடுஞ்செழியன் தன் சக்திக்கேற்ப கோவலனின் காலை வாங்கியிருக்கிறான்' என்று பாராட்டுவார். மண்டபமே சிரிப்பில் மூழ்கும்.

மதுரைப் பல்கலைக்கழக ஆட்சியாளர்களுக்கு ஏன்தான் இந்த வயிற்றெரிச்சலோ? ஆசிரியர்கள் கவலையில்லாத மனிதர்களாக, ஆனந்தமாகச் சிரித்து வாழக்கூடாது என்று நினைத்து மையத் தேர்வுத்தாள் திருத்தப் பணியையே நீக்கி விட்டார்களே!