பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விழியில் ஊறி வெளியில் வழியும் கண்னீரைப்போலப் புறவயமானவை, உணர்வானவை, “ஒருவரின் மொழிநடை அவர்தம் ஆளுமை (Personality)யை அடையாளம் காட்டுகிறது” என்று ஃப்ரை (N.Frye) உரைத்தது போல, மீரா என்னும் மனிதரே இக்கட்டுரையில் வெளியிடப்படுகிறார். அமீபாவிலிருந்து மனிதன் பரிணமித்தது உண்மையோ இல்லையோ? கவிஞன் ஒர் அமீபாதான். தன்னை உடைத்து உடைத்துத் தன்னைத்தான் இனப்பெருக்கம் செய்து கொள்கிறான்-தன் முழுமையை இழக்காமலேயே!

சமுதாயப் பொறுப்புணர்ச்சி, உலகின் உயிரனைத்தும் நலமுறவேண்டும் என்ற மனிதாபிமான அக்கறை இவை மீராவின் பிறப்பியல்புகள். தீமை கண்டபோது ஆவேசம் கொள்வது இவர் பண்பு. இந்த ஆன்ம வேகமே இவரது மொழி நடையில் மின்சாரம் பாய்ச்சுகிறது. அதனால் இவர் படைப்புக்கள் ஆழத்தில் சரிகைமினுக்கிக் கொள்ளும் கிணற்றைப் போல் அமுங்கலாக இயல்லாமல் பீறிட்டுப் பாய்கின்ற ஆர்ட்டிசான் ஊற்றுக்களாகி விடுகின்றன. இந்த வேகத்தின் விளைவு வியப்பானது. மீராவுக்குச் ‘சிவப்போ, கறுப்போ’, எந்த நிறமும் பூசிப் பார்க்க நம்மால் முடிவதில்லை. சிந்தனைச் சுழற்சியில் எல்லா நிறங்களும் வெள்ளை வெளிச்சமாகி, ஒளிவீசத் தொடங்கிவிடுகின்றன.

பேச்சு என்பது மூச்சில் முளைப்பது என்பதை மீரா எப்போதும் மறப்பதில்லை. அதனால்தான் அவர் சொற்கள் கொண்டு பபிள்கம் ஊதுவதில்லை. பலூன் ஊதித் தோரணம் கட்டுவதில்லை. எரியும் புண்ணுக்கு இதமாக ஊதும் தாயின் மூச்சுப்போல், கண்ணில் விழுந்த தூசியை ஊதும் நண்பனின் மூச்சுப்போல் மீராவின் சொற்கள் நம்மேல் படர்ந்துவிடுகின்றன.

7