பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

27


 ஜவஹர்லால் நேரு காந்தி வழியால் வசீகரிக்கப் பட்டார். மறியலில் கலந்து சிறை செல்லவேண்டும் என்று துடித்தார் அவர்.

அவருடைய போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. மோதிலால் நேருவுக்கு புதிய வழிகள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. எந்தப் பிரச்னையையும் தீர யோசித்து, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு உறுதியான முடிவுக்கு வருவதே அவருடைய சுபாவம். இதனால் தந்தைக்கும் மகனுக்குமிடையே பலத்த அபிப்பிராய பேதமும் வாக்குவாதமும் உண்டாயின. இந்நிலைமை வீட்டில் உள்ளவர்களின் ஆனந்தத்தையும் கெடுத்துவிட்டது ஜவஹரின் தாயும் சகோதரிகளும் மிக்க மனவருத்தம் அனுபவித்தனர்.

இது சம்பந்தமாகப் பேசி ஆலோசனை புரிய காந்திஜீயை மோதிலால் 'ஆனந்த பவன'த்துக்கு அழைத்திருந்தார். அலகாபாத்துக்கு விஜயம் செய்தார் மகாத்மா. நேரு மாளிகையில் தங்கியிருந்து, மோதிலாலுடன் பேசி விவாதித்தார். முடிவில் தந்தைக்கு மன வேதனை அளிக்கக்கூடிய காரியம் எதுவும் செய்யவேண்டாம். அவசரப்பட்டுச் செயல் புரியக் கூடாது' என்று ஜவாஹருக்குப் போதித்தார் காந்திஜீ.

மகாத்மா நேரு குடும்பத்தின் அதிதியாக வந்திருந்த போது, அவருடைய காரியதரிசி மகாதேவ தேசாயும் உடன் இருந்தார். ஒரு நாள் அவர் விஜயலக்ஷ்மியைத் தனிமையில் கண்டு, 'மாடர்ன் ரிவ்யூ' எனும் பத்திரிகையின் இதழ் ஒன்றைக் காட்டி, 'இதோ இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தாயா?’ என்று விசாரித்தார்.