பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

விஞ்ஞானத்தின் கதை

கிரேக்க அறிஞரான பிதாகரஸ் ஒரு பெரிய கணித வல்லுநர். இவர் அனேக அடிப்படைத் தேற்றங்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவரது பெயரின் நினைவாக இன்னும் நம்மிடையே பிதாகரஸ் தேற்றம்——நேர் கோண முக்கோணத்தைப் பற்றியது—— இருந்து வருகிறது.

இவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு இடைக் காலத்திற்குப் பின்னால் சாக்ரடீஸ் கிரேக்கத்தில் வாழ்ந்தார். இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டிய ஒரே 'குற்றத்'திற்காக இவர் நஞ்சிடப்பட்டுக் கொல்லப்பட்ட பரிதாபம் நாம் அனைவரும் அறிந்ததே!

அடுத்து குறிப்பிடத் தகுந்தவர் அரிஸ்டாட்டில். இவர் மாவீரனான அலெக்சாண்டருக்கு ஆலோசகராக இருந்தார். மன்னன் செல்லும் இடங்களெல்லாம் இவரும் செல்ல நேரிட்டதால் வெவ்வேறிடங்களில் கிடைத்த விஞ்ஞானச் செய்திகளை இவரால் தொகுக்க முடிந்தது. இவர்தான் அன்றைய நாளதுவரை பேச்சு வழக்கில் இருந்த விஞ்ஞான உண்மைகளை எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்தவர். இந்த அரிய செயலின் அடிப்படையில்தான் 'விஞ்ஞானத்தின் தந்தை' என்று இன்றும் இவர் புகழப்படுகிறார்.

விஞ்ஞானம் பெரும்பாலும் அஞ்சா நெஞ்சம் கொண்ட விஞ்ஞான வணங்கா முடிகளால்தான் வளர்ந்திருக்கிறது. ஒரு விஞ்ஞானி கூறியதை இன்னொரு விஞ்ஞானி பின் பற்றுவதில்லை. முன்னவரின் கூற்றுக்களைப் பொய்யாக்க வேண்டுவதே பின்னவரின் வேலையாக இருக்கும். எடுத்துக் காட்டாக,