பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாண்மை

23

வரை அவனது நெஞ்சின் அச்சத் துடிப்பிலேயே காலம் கழிகிறது. "வானம் பொய்த்துவிட்டால்...? வானம் முறைதவறி நடந்துகொண்டால்...?" என்ற கேள்விகள் கனவிலும் கூட வந்து அவனை அச்சுறுத்துகின்றன. இதே நிலைதான்—இதைவிட மோசமான நிலைதான் - வேளாண்மையின் தொடக்கத்தில் இருந்தது போலும்.

விலங்குகளைக் கொன்றுதின்ற காலம் மறைந்து நிலத்தில் பயிரிட்டு உயிர்வாழ வேண்டியநிலை ஏற்பட்டபின் மனிதன் சில வாழ்க்கை நியதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆழ்ந்து சிந்திக்கும் திறன் பெருகிற்று. கற்பனையும் கை கோத்துக்கொண்டது. இந்த அறிவினால் தனக்கு வாழ்வளித்த பூமியைத் தாய் என்று கற்பனையாய் பாவித்துப் பெரிதும் மரியாதை செய்தான். அந்த நிலம் மழையை நம்பியிருந்ததால், அந்த மழை பொழியக் காரணமாக இருந்த வானத்தைத் தந்தை என்று கற்பனையாய் பாவித்தான். இவை தெய்வமாகப் பின்பு உருவாக்கப்பட்டன. அத்தோடு வரையறுக்காமல், இடிக்கும் மின்னலுக்கும் பின்னே மழை பொழிந்த காரணத்தால் அவை இரண்டும் கூடத் தெய்வமாக்கப்பட்டன. மழை பொழியாது தவறினாலும் சரி, நிலம் நல்ல பலனைத் தராமல் தவறினாலும் சரி அதை நீக்கப் பூசனைகள் பல செய்யப்பட்டன. இவ்வாறு தெய்வங்களும் பூசனைகளும் மனித வாழ்வில் இடம் பெற்றன.

நரபலியும் வேளாண்மையை முன்னிட்டே தொடங்கி யிருக்கிறதென்றறிய வியப்பானதாகும். வேளாண்மையை நம்பி வாழத்தொடங்கிய ஒவ்வொரு நிலப் பகுதியினரும் தமக்குள் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர்.