பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. வீடு

னிதன் விலங்குகளுக்கு அஞ்சியகாலம் சிறிது சிறிதாக மறைந்து, அவற்றை விரட்டி விட்டு அவை குடியிருந்த குகைகளில் அடைக்கலம் புகுந்தான். ஆயினும் அச்சம் மிக்க வாழ்க்கையிலிருந்து அவன் விடுதலை பெற்றான் இல்லை.

மனிதன் கூட்டமாக வாழ்ந்தபோதிலும் ஒரு பொதுப் பாதுகாப்புத் தேவைப்பட்டது. அந்த பொதுப் பாதுகாப்புக்காக அமைந்ததுதான் வீடு. வீடு என்ற ஒன்று தனியே தோன்றுவதற்கிருந்த சூழ்நிலைகளைச் சற்றே விரிவாக ஆராய்வோம்.

வேளாண்மை ஆற்றோரங்களில் தொடங்கிய போது விலங்குணவு அறவே ஒழிக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை. மாமிசமும் தானிய உணவும் சேர்த்தே உண்ணப்பட்டன. இத்தகையநிலை உருவானபோது தான் குடும்பம் என்ற ஒன்று ஏற்பட்டுக் கட்டுப்பாடுகள் உருவாயின. இயற்கையிலேயே வலிமை மிகுந்திருந்த ஆண் காட்டிற்குள் சென்று விலங்குகளைக் கொன்று மாமிச உணவைச் சேகரித்துக்கொண்டு வரவேண்டியது; வலிமை குறைந்திருந்த பெண் வயற்காட்டில் விளைந்த தானிய வகைகளைப் பக்குவப்படுத்தி உணவாக்க வேண்டியது; ஆக உணவு வகைகளைத் தயாரிக்க ஏற்பட்டதுதான் வீடு. பருவமாற்றங்களால் ஏற்படும் வெப்ப, தட்பங்களிலிருந்து உணவு வகைகளைப் பாதுகாக்கவும் வீடு உருப்பெற்றதெனக் கொள்ளலாம்.