பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. மானங் காத்த மனிதன்

தொடக்க காலத்தில் மனிதன் விலங்குகளுக்கு அஞ்சியதைப் போலவே வெப்ப, தட்பப் பருவங்களுக்கும் அஞ்சி வாழ்ந்தான். உலகின் வெப்ப, தட்பச் சூழ்நிலைகள் பருவத்திற்குப் பருவம் மாறுதலடைந்து மனிதனை வாட்டின. அப்பொழுதும் அவன் விலங்குகளை நோக்கியே தன் வாழ்க்கையைப் பண்படுத்திக் கொண்டான். விலங்குகளுக்கு இருப்பதைப் போல தடித்ததோல் மனிதனுக்கு இல்லை; அவற்றிற்கு இருப்பது போல அடர்ந்த மயிர்ப் பகுதி - இயற்கை வழிவந்த போர்வை மனிதனுக்கு இல்லை. இத்தகைய வசதிகளைப் பெற மனிதன் தன் அறிவைப் பயன்படுத்திய போதுதான் உடை உருப்பெற்றது. பொதுப் பாதுகாப்புக்கு வீடு உதவியது போல, மனிதனின் தனிப் பாதுகாப்புக்காக அமைந்தது உடை.

குகைகளை வீடுகளாகக் கொண்ட காலத்திலேயே உடை மனிதனுக்குத் தேவைப்பட்டிருக்க வேண்டும் என்பது இதனால் புரிகிறது. வெயிலின் வெப்பத்தை விட குளிரின் வாட்டலே மனிதனே வெகுவாகப் பாதித்தது. தடித்த தோலினாலும் அடர்ந்த உரோமங்களினாலும் மிருகங்கள் இயற்கையின் கொடுமைகளிலிருந்து தப்பி வாழ்வதைக் கண்ட மனிதன் தான் கொன்று உணவாக உண்டபின் மிகுதியாயிருந்த தோல் பகுதியைத் தன் மீது போர்த்துக் கொண்டான். இப் போர்வை முதலில் உடம்பு முழுவதும் முடிக் கொண்டிருந்தது. பின்பு அங்க அசைவுகளின் வசதியை முன்-