பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

விஞ்ஞானத்தின் கதை

உணவை முதலில் கட்டுப்படுத்துகின்றனர். இந்த நிலைதான் ஆதி நாளிலிருந்து கையாளப் படுகின்றது.

மனித உடலை ஓர் இயந்திரமாகக் கொள்ளலாம். இந்த இயந்திரத்தின் வேலைப்பாடு வியப்புக்கு உரியது. நமது உடல் இந்தப் பெரிய உலகின் சிறிய குறிப்புப் படமாகும். எதை உடம்பில் காண முடியாதோ அதை வெளியில் காண முடியாது. எனவேதான் உள்ளத்தைப் பொறுத்தது உலகு என்றனர் ஞானியர். உடற்கூற்றைப் புரிந்து கொள்ளும் போதுதான் உலகைப் புரிந்து கொள்ளுகிறோமென்பது இதனால் தெளிவாகிறது. இந்த எண்ணத்தின் உந்தலால் தான் மருத்துவம் உருப்பெற்றது; வளர்ந்தது. பெரும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளாலும் கூட இன்னும் நம் உடலின் இயக்கத்தை முழுமையாக அறிய முடியவில்லை. அறிவு முழுமையாக கைக்கு அகப்படக் கூடியதல்ல; அது நாளுக்கு நாள் வளரும் தன்மை உடையது என்பதற்கு மருத்துவம் நல்ல எடுத்துக் காட்டு. இப்படி இருக்க, உடலைப் பற்றி அறிய பாமரனுக்கு ஏற்படும் ஆவலைப் பற்றித் தனியே கூற வேண்டுவதில்லை அல்லவா? உள்ளத்தை ஆராயும் திறன் கொண்ட இயந்திர சாதனத்தை இதுவரை எவரும் கண்டு பிடிக்கவில்லை. உடலின் உள்ளும் புறமும் நடைபெறும் இயக்கம் பற்றி விஞ்ஞானிகள் எவ்வளவு விரிவாக எடுத்துச் சொன்ன போதிலும், அந்த இயக்கம் எதன் உந்தலால் நடைபெறுகிறது என்பதை மட்டும் விளக்க முடியவில்லை. சாவு ஏன் வருகிறது? அதன் வருகையை முன்கூட்டியே தெரிந்துரைக்க முடியுமா? இக்கேள்விகளுக்கான பதிலை எவர் தருவார்?