பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை

T. சக்திவேல், எம். ஏ.
அறிவியல் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.

விஞ்ஞானத்தின் சிறப்பை இந்நாளில் அறியாதவர் எவரும் இல்லையென்றே சொல்லலாம். ஆனாலும் அவர்களுக்கு விஞ்ஞானம் பிறந்து வளர்ந்த கதை ஒரு புதுமையாகத்தான் இருக்கும். இக்கதை, மிக எளிய முறையில் எல்லோருக்கும் விளங்கும்படியாக இச்சிறு நூலில் எழுதப்பட்டிருக்கிறது. பிடிவாதத்திற்காக, விஞ்ஞான வளர்ச்சி உலக அழிவிற்கு வழிகோலுவதாக இருக்கிறது என்று வாதாடுபவர்களும் உண்டு. அவ்வகைப்பட்டோருக்கு இச்சிறு நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் உண்மைகள் சரியான பதிலாகும். மனிதன் தோன்றியதிலிருந்தே விஞ்ஞானத்தின் உதவியை நாடியிருக்கிறான் என்ற உண்மையும், விஞ்ஞான முன்னேற்றம் இல்லாவிடில் உலகம் இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது என்ற உண்மையும், பலவகை எடுத்துக்காட்டுகள் மூலமாக இந்நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கும், விஞ்ஞானக் கல்வியில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும் என நம்புகிறேன்.

மதுரை T.சக்திவேல்
2-2-'60