பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயணம்

63

லிவிங்ஸ்டன் என்பவரோடு கூட்டாகச் சேர்ந்தார். இவர் அமெரிக்க அரசாங்கத்தாரால் பிரான்சில் மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இருவருமாக கி. பி. 1807-இல் நியூயார்க்கிலிருந்து ஆல்பணிவரை நீராவிப் படகினால் ஆற்றுப் பாதையில் வாணிபப் பாதையைத் தொடங்கினர்; பெருத்த லாபமும் பெற்றனர். ஆனால் முதலில் நீராவிப் படகைக் கண்டுபிடித்த ஜான் ஃபிச் வெற்றி காணாமல் மனந்தளர்ந்து விடம் உண்டு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார்.

நீராவிக்கு அடுத்து பெட்ரோல் வழக்கிற்கு வந்தது. அதுவும் கப்பல்களில் பயன்படுத்தப் படுகிறது. தொடக்க காலத்து தனி மரக்கட்டைகள் போக்கு வரவு சாதனமாக மிதந்ததை சிந்தித்தும் பார்க்க முடியாதவாறு பெரிய பெரிய கப்பல்கள், சண்டைக் கப்பல்கள் இன்று கடலில் மிதக்கின்றன.

தரைவழிப் பயணத்தை மீண்டும் தொடர்வோம்.

நீராவியைப் பயன்படுத்தி தரையில் ஒடும் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஜார்ஜ் ஸ்டீவன்சன் ஈடுபட்டார். இவர் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுரங்கத்திலிருந்து உலைக்களத்திற்கும், ஆலைகளுக்கும் செல்வதற்கான புகைவண்டியை இவர் முதலில் அமைத்தார். இதனால் குறைந்த முயற்சியில் நிறைந்த லாபம் கிடைத்தது; நேரமும் மீதமாயிற்று. இவற்றின் விளைவாக நிலக்கரியின் விலை எழுபது சதவிகிதம் குறைந்தது. தன் முயற்சியில் வெற்றிகண்ட ஸ்டீவன்சன் மக்கள் பயணம் செய்யப் பயன்படும்படி மான்செஸ்டரிலிருந்து லிவர்ப்பூல் வரை புகை வண்டி ஒன்றை தினமும் ஒட்டினார்.