பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


உழைத்துழைத்து உலகத்துக்கு அரும்பெரும் தொண்டாற்றிய ஒர் அறிவியல் ஞானியைப் படுகொலை செய்த சைரக்யூஸ் நகரம், மீண்டும் பழைய பொலிவோடும் வலிவோடும் காட்சியளிக்கக் கூடாது என்பதைப் போல, அந் நகரமே கரிமேடுகளாக் குவிந்து கிடந்தன !

ஆர்க்கிமிடீஸ் வீடு மட்டுமா எரி நெருப்புக்கு இரையாயிற்று? எவனெவன் அறிவுக்குத் துரோகியோ, அவனவன் வீடெல்லாம் இருந்த இடமே தெரியாது எரிந்து கருகிப் போயிற்று!

ஆர்க்கிமிடீஸ் படுகொலைக்கு ஆளாகி அவரது உடல் நெருப்பிலே வெந்து கொண்டிருக்கும்போது, அவரது நண்பர்களிலே சிலர், நெருப்பையும் கண்டு நெஞ்சு கலங்காது வீட்டிற்குள் புகுந்து அவரது சவத்தைக் கைப்பற்றி மீண்டார்கள் !

அந்த உடலுக்கு என்னென்ன மரியாதைகளைச் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்தார்கள்.

ஈமச் சடங்குகளைச் சிறப்பாக நடத்திக் கண்ணிர் விட்டபடியே ஆர்க்கிமிடீஸ் உடலைக் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்!

ஒருபுறம் எரிந்த சைரக்யூஸ் நகரத்தின் கரி மேடானக் காட்சி, மறுபுறம் அறியாமையை எதிர்த்த அறிவு நாயகனின் கல்லறைக் காட்சி, இன்னொரு புறம், போர்ப்படைகள் வெற்றிப் போதையால் ஓங்காரக் கூச்சலிடும் காட்சி!