பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

77


ஆனால், அறிவியல் இயக்கத்தை எடுத்து மக்களுக்கு விளக்கிட, எதிர்காலத்திற்கு ஓர் அறிவியல் இயக்கம் தேவை என்பதை அவர்கள் மறந்தே போய் விட்டார்கள்.

அத்தகைய அறிவியல் இயக்கம் ஒன்று இல்லாத காரணத்தால்தான், இன்றும்கூட அறிவியல் ஞானிகளைப் பற்றி சரியான விவரம் தெரியாமல் உலகின் பெரும்பான்மையான மக்கள் காலந்தள்ளி வருகின்றனர்.

அரசியலுக்கு, கட்சிகள், கட்சிக் கிளைகள் பல ஊருக்கு ஊர் இருப்பதைப்போல்- அறிவியலுக்கும் ஒர் இயக்கம் இருந்திருந்தால் அவை பரவி ஓங்கி, மூடநம்பிக்கைகள் பெரும்பள்ளத்திலே வீழ்த்தப் பட்டுப் புதைபட்டுப் போயிருக்கும் என்பது உறுதி.

அறிவியலுக்கும் ஒர் அறிவியக்கம் தேவை என்பதை உலகம் தோன்றியது முதல் இன்றுவரை உணர்ந்த ஒரே அறிவுக்கரசன் பித்தாகரஸ் ஒருவர்தான்.

கிரீஸ் மன்னர் அவரை நாடு கடத்தியதற்குப் பிறகு, அந்த அறிவுச் சிங்கம் எங்கெங்கோ ஒடி அலைந்து திரிந்து அவதிப்பட்டு அல்லலை ஏற்றதோ, அங்கங்கெல்லாம் தமக்குரிய மாணவர்களைச் சேர்த்து ஒரு பொதுப்பணி மன்றத்தைத் தோற்றுவித்தது.

அவ்வாறு அந்த அரிமா உருவாக்கிய அறிவு மன்றங்கள், உலகிலே புதுமையான - புரட்சியான புணருத்தாரனமான அறிவுப் புரட்சிகளை உண்டாக்கின என்றால் மிகையாகா!