பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

285. பாட்டுப்பாடி வருவான்;
        பட்டென்று அடித்தால் சாவான்.

286. வெளியே வெள்ளிக் கட்டி:
        உள்ளே தங்கக் கட்டி.

287. அக்காள் வீட்டில் விளக்கேற்றினால்,
        தங்கை வீட்டில் தானே எரியும்.

288. இரவல் கிடைக்காது;
        இரவில் கிடைக்கும்.

289. காலும் இல்லை; கையும் இல்லை.
        காடும் மலையும் நெடுகச் செல்வான்.

290. உச்சியில் குடுமி உண்டு; மனிதனல்ல,
        உடம்பெல்லாம் உரோமமுண்டு; குரங்குமல்ல.
        உருண்டை விழி மூன்றுண்டு; சிவனுமல்ல.

291. செடியில் விளையாத பஞ்சு;
        தறியில் நூற்காத நூல்;
        கையில் தொடாத துணி.

292. ஒடிப் படர்வேன்; கொடியல்ல.
        ஒளிமிக உண்டு; நிலவல்ல.
        மனைகளை அலங்கரிப்பேன்; மலரும் அல்ல.

293. தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்,
        தொட்டால் போதும்; ஒட்டிக் கொள்வான்.

294. குட்டி போடும்; ஆனால், எட்டப் பறக்கும்.

295. பிறக்கும்போது சுருண்டிருப்பாள்;
        பிறந்த பின்னர் விரிந்திருப்பாள்.

296. நாலு மூலை நாடகசாலை;
        நடுவிலிருக்கும் பாடகசாலை;
        ஆடும் பெண்கள் பதினாறு.
        ஆட்டி வைப்பவர் இரண்டுபேர்.

297. எலும்பில்லாத மனிதன்,
        கிளையில்லாத மரத்தில் ஏறுகிறான்.