பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


310. கழுத்து உண்டு; தலை இல்லை;
        உடல் உண்டு; உயிர் இல்லை.
        கையுண்டு விரல் இல்லை.

311. கண்ணில் காண உருவம் உண்டு;
        கட்டிப் பிடிக்க உடல் இல்லை.

312. ஒரு அகப்பை மாவாலே,
        ஊரெல்லாம் கல்யாணம்.

313. எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது.

314. கையிலே அடங்குவார்,
        கதை நூறு சொல்லுவார்.

315. நீலக்கடலிலே பஞ்சு மிதக்குது.

316. இருந்தாலும், பறந்தாலும், இறந்தாலும்
        இறக்கை மடக்காத பறவை என்ன பறவை?

317. உயிர் இல்லாப் பறவை,
        உலகைச் சுற்றி வருது.

318. இந்தப் பிள்ளை பெரியவனானால்,
        படிக்காமலே பலன் தருவான்.

319. நாலு உலக்கை குத்திவர,
        இரண்டு முறம் புடைத்து வர,
        துடுப்புத் துளாவி வர,
        துரை மக்கள் ஏறிவர.

320. பிள்ளையிலே ஐந்து பிள்ளை - நாம்
        பிரியமாய் அழைக்கும் பிள்ளை
        பெயர் என்ன, சொல்லுவீரே?

321. பிறக்கும்போது வால் உண்டு;
        இறக்கும்போது வால் இல்லை.

322. மண்ணுக்குள்ளே பொன்னம்மாள்.

323. மொட்டைத் தட்டிலே
        எட்டுப்பேர் பயணம்.