பக்கம்:விடுகதை விளையாட்டு.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

363. அந்தரத்தில் பறந்திடுமாம்; பருந்து அல்ல.
        அழகான வாலுண்டு; அனுமார் அல்ல.
        விந்தையான கட்டுண்டு; மூட்டை அல்ல.
        வேந்தருக்கும் அதற்கும் ஒரு நெருக்கம் உண்டு.

364. உப்பை உண்டவன்
        உறங்காமல் அலைகிறான்.

365. ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே,
        பச்சைப் பாம்பு தொங்குது.

366. மூன்று நிறக் கிளிகளாம் - அவை
        கூண்டில் போனால் ஒரே நிறமாம்.

367. நீட்டிக் கொண்டு நடுவே படுக்கும்;
        சுருட்டிக் கொண்டு மூலையில் நிற்கும்.

368. அப்பன் சொறியன்;
        ஆத்தாள் சடைச்சி;
        அண்ணன் முழியன்;
        நானோ சக்கரைக்கட்டி.

369. அறுக்க உதவாத கருக்கரிவாள் எது?

370. காலையில் வந்த விருந்தாளி
        மாலையில் மறைந்திடுவார்.

371. நாலு காலுண்டு; வீச வாலில்லை.

372. கொல்லையிலே சோறு பொங்கி வைத்தேன்;
        காக்கையும் தின்னவில்லை; கழுகும் தின்னவில்லை.

373. ஊசி நுழையாத கிணற்றிலே,
        ஒரு படி தண்ணீர்.

374. இத்தனுாண்டு சித்தாளுக்கு,
        ஏழு சுற்றுக் கண்டாங்கி.

375. அந்தரமான குகையிலே,
        சுந்தரமானவள் ஆடுகிறாள்.

376. ஆடி அசைந்து வர, அடியில் சிந்திவர,
        கூடிய பெண்கள் குடுமியை ஆட்டிவர.