பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

எஸ். எம். கமால்


இதற்கிடையில், முத்துராமலிங்க சேதுபதி மன்னர், பரங்கியரையும் நவாப்பையும் எதிர்த்து இறுதிப் போர் நடத்துவதற்காக தீட்டியிருந்த ரகசியத் திட்டத்தின் தடயங்களை கலெக்டரும் மார்ட்டின்ஸ்-ம் கண்டுபிடித்தனர். தமது ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில், சேதுபதி மன்னர் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். தமக்கும், சிவகங்கை அரசுக்கும், எதிரிகளாக இருந்த மருது சகோதரர்களை அழித்து, சிவகங்கையில் மறவரது பாரம்பரிய ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். குறிப்பாக சிவகங்கை மன்னர் வழியினரான படைமாத்துர் கவுரி வல்லபத் தேவரை அங்கு அரசராக நியமிப்பது என்பதாகும். இந்த முயற்சியில் தனக்கு எதிராகவும், மருது சகோதரர்களுக்கு ஆதரவாகவும், செயல்பட்ட கும்பெனியாரையும் நவாப்பையும் ஒழித்துக் கட்டுவது. இராமநாதபுரம் சீமையையும், சிவகங்கைச் சீமையையும், முந்தைய மகோன்னத தன்னரசு நிலைக்கு கொண்டுவருதல் என்பது அவரது திட்டம்.

திட்டம் தெளிவானது தான். ஆனால் அதனை நிறைவேற்றத் தொடுக்கும் மாபாரத போருக்கு பெருந்தொகை தேவைப்பட்டது. வெடிமருந்துச் சாதனங்களை, வெளி நாட்டாரிடமிருந்து பெற வேண்டியதாக இருந்தது. அப்பொழுது தென்னிந்திய அரசியலில், டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். டச்சுக்காரர்களின் செல்வாக்கு பெரும்பாலும் ஒடுங்கிய நிலையில் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயருக்கு எதிரான சக்திகளையும், தேசாபிமான உணர்வுகளையும் ஊக்கி வந்தனர். என்றாலும் ஆங்கிலேயருக்கு எதிராக வியாபாரத்திலும், வேறு துறைகளிலும் விறுவிறுப்பாக பங்கு கொள்ளும் நிலையில் இல்லை. ஐரோப்பாவில் நடந்த எட்டு, ஆண்டுப் போரில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. கி. பி. 1790ல்-பிரெஞ்சுப் புரட்சி துவங்கி, முடியாட்சி ஒழிந்து மக்கள் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. இந்தியா போன்ற கடல்கடந்த நாடுகளில் அவர்களது நிலையைப் பலவீனப்படுத்தியிருந்தது. ஏற்கனவே சேதுபதி மன்னர் கி.பி. 1787-ல் பிரெஞ்ச் நாட்டை அரசியல் ரீதியாக அணுகியிருந்தும். எவ்விதப் பலனும் கிட்டவில்லை.[1] என்றாலும், இத்தகைய இடர்ப்பாடுகளினால், மனம்


  1. Kathirvel, S., Dr., History of Marawas (1972), p. 182