பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

எஸ். எம். கமால்

முடியாத நிலையில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர வெறுக்கத்தக்க போக்கு வேறு எதுவும் கிளர்ச்சியில் காணப்படவில்லை. என்றாலும் கிளர்ச்சி வேகமாகப் பரவியது. பாப்பான்குளம், பள்ளிமடம் ஆகிய பகுதிகளில் கிளர்ச்சிக்காரர்கள் முனைந்து நின்றனர். பொதுவாக வைகைப் பகுதிக்கும், குண்டாற்றுக்கும் இடைப்பட்ட நீண்ட பகுதியில் கிளர்ச்சி உச்சநிலையில் இருந்தது. அதனைக் கிளர்ச்சித் தலைவர் மயிலப்பனின் சொற்களில் சொல்ல வேண்டுமானால், 'இந்த இயக்கம் காட்டாற்று வெள்ளம் போல பரந்து பரவிக் காணப்பட்டது. பன்னிரண்டாயிரம் மக்கள் அதில் பங்கு கொண்டனர்.[1]

கிளர்ச்சியின் போக்கு பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்ள கலெக்டர் லூவிங்டன் இராமனாதபுரத்தில் இருந்து தமது சேவகர்களை முதுகுளத்துார் அமில்தாரிடம் அனுப்பி வைத்தார். அவர்களில் ஒருவன் கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்டு கலெக்டரது கடிதத்துடன் சரணடைந்ததுடன் தமது உடைகளையும் இழந்து அவமானப்பட்டு வந்த வழியிலே இராமனாதபுரத்திற்கு திரும்பிவந்தான் . அடுத்து, நான்கு கள்ளர்களை முதுகுளத்துார் பகுதிக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். அவர்கள் கிளர்ச்சிக்காரர்களது ஆதரவாளர்கள் போல நடித்து கிளர்ச்சி பற்றிய விவரங்களை கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.[2] அவைகளில் இருந்து கிளர்ச்சியின் போக்கு, தாக்கம், கிளர்ச்சிக்காரர்களது எண்ணிக்கை, இயல்பு ஆகியயவைகளை நன்கு புரிந்து கொண்டு கிளர்ச்சிப் பகுதிகளுக்கு கும்பெனி பட்டாளத்தை அனுப்பிவைக்க கலெக்டர் ஏற்பாடுகள் செய்தார்.

கும்பெனியாரது முதல் அணி முதுகுளத்துருக்கு இராமனாதபுரம் கோட்டையிலிருந்து தளபதி மார்ட்டின்ஸ் தலைமையில் புறப்பட்டது. வழியில் அந்த அணி மறைந்து இருந்த கிளர்ச்சிக்காரர்களால் பலமாகத் தாக்கப்பட்டது. கும்பெனிப் பட்டாளத்தில் ஐவர் மடிந்தனர். மார்ட்டின்ஸ் மேலும் முன்


  1. Madurai Collectorate Records. Vol. 1139 (1802)
  2. Ibid., Vol. 1157, 30-4-1799.