பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11
கிளர்ச்சியின் தொடர்ச்சி

அந்நிய எதிர்ப்பு உணர்வும் ஆவேசமும் கொண்டு போர்க் கோலம் பூண்ட மறவர்கள், அதற்குள்ளாக அடங்கி விட்டனரா? கிளர்ச்சியின் போக்கு பற்றிய விவரங்களை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆர்வத்துடன் கேள்விப்பட்டு வந்த சேதுபதி மன்னருக்கு மறவர் சீமையின் நிலை வியப்பையும் வேதனையையும் அளித்தது. ஐந்து ஆண்டுகளாக திருச்சிக் கோட்டையில் அனுபவித்து வந்த அவலத்தின் ஆயிரம் மடங்கு அந்த ஒரு நொடிப்பொழுதில் அவரது நெஞ்சத்தில் மிஞ்சி நின்றது.

தொன்று தொட்டு வந்துள்ள மறவர் மக்களின் தன்னரசைப் புறக்கணித்து அவர்களது சுதந்திர உணர்வுகளை மதிக்காது ஆட்சி செய்கின்ற பரங்கியரையும் நவாப்பையும் தங்களது நாட்டினின்றும் அகற்ற வேண்டும்; மாற்றானுக்கு அடிபணியாத, மானம் மிகுந்த, சுதந்திர மண்ணாக மறவர் சீமையை என்றென்றும் மிளிரச் செய்ய வேண்டும்; என்ற சிறப்பான இலட்சியங்களைச் செயல்படுத்த துடித்துக் கொண்டிருந்தவர் அல்லவா. சேதுபதி மன்னர். சிறகொடிந்த பருந்தாக சிறைக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் அவருக்கு முதுகுளத்தூர் பகுதியின் மக்கள் கிளர்ச்சி தமது கனவை நனவாக்க உதவும் என்று நம்பி இருந்த நிலையில் கிளர்ச்சி தளர்ந்த செய்தி கிடைத்தது. கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கிய மயிலப்பன், வீரம் மணக்கும் முதுகுளத்துர் மண்ணில் பிறந்த மாவீரன் ஆயிற்றே. மாப்பிள்ளைத் தேவனுடன் நடத்திய மோதல்களில் பங்கு கொண்டு இராமனாதபுரம் அாசுக்கு சிறந்த சேவை செய்த சேர்வைக்காரர். ஏற்கெனவே சேதுபதி மன்னரை திருச்சி கோட்டைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொழுது பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சுக்கார்களுடன் ராணுவ உதவி கோரி பேச்சு வார்த்தை நடத்தியவர்.[1] அத்துடன் சிறையில் உள்ள சேதுபதி மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து தப்புவிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தி


  1. Kathirvelu, S. Dr., History of Marawas, (1972), p. 220.