பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறவர் சீமை

மறவர்

பாண்டிய நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் நெய்தலும் பாலையுமாக அமைந்திருந்த பகுதியில் இயல்பாகவே கடின வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்கள் மறவர்கள். அவர்கள் வாழ்ந்த மண்ணிலே பயிர்தரும் விளைச்சல் இல்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் உயிர் வளர்க்கும் வீரம் இருந்தது. புகழ் இருந்தது. பெருமை தரும் போர் ஆற்றலும் நிறைந்து இருந்தது. மான உணர்வும் அஞ்சாமையும் விஞ்சிய இந்த மக்கள், பாண்டியர்களது மாசு துடைக்கும் தூசுப் படையாக இருந்தனர். பகைவரைப் பொருதி பொன்றாத வெற்றியையும் புகழையும் சேர்த்தனர்.

'அமரர் தம் உலகொடு, இவ்வுலகு கைப்படும் எனினும் அது ஒழிபவர், உயிரை விற்று உறுபுகழ் கொள உழல் பவர்' ஆக இருந்தனர் என ஜெயங்கொண்டார் அவர்களைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இதன் பொருட்டு போர் எனில் புகழும் புனைகழல் மறவர்' என புறப்பாட்டும்[2] 'பகை எனில் கூற்றம் வரினும் தொலையான்' என கலித்தொகையும்[3] அவர்களுக்குக் கட்டியம் கூறுகின்றன.

ஏழாவது நூற்றாண்டில் இருந்த அய்யனாரிதனார் என்ற தமிழ்ப் புலவர், மறவர்களது புகழ் வாழ்க்கையை மறப்பண்புகளின் இலக்கணமாக புறப்பொருள் வெண்பாமாலை என யாத்துள்ளார்.


  1. ஜெயங்கொண்டார், கலிங்கத்துப் பரணி, பாடல் எண்.354
  2. கோவூர் கிழார், புறநானூறு, பாடல் எண் 31
  3. கலித்தொகை