பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

எஸ். எம். கமால்

கட்டியக்காரர்கள், சேதுபதிகளது விருதுகளை முழக்கவும், சாமரம் பிடித்த பணியாளர் கவரிகளை அசைத்து முன் செல்லவும், அரண்மனை முகப்பிலிருந்து சிங்காதன மேடை வரை விரிக்கப்பட்டிருந்த சீனப்பட்டில் நடந்து அரண்மனையின் தென்மேற்கு மூலையில் உள்ள சேதுபீடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த பீடத்தில் முதலாவது சேதுபதி மன்னர் அமர்த்தப்பட்டு, ஸ்ரீ இராமபிரானால் முடிசூட்டப்பட்டார் என்பது ஐதிகம்.[1] அந்த இருக்கையில் அமர்ந்து, புனித கங்கையில் நீராடி, மங்கலஉடை அணிந்து கொள்ளுதல், சேதுபதிகளது மரபு. தலைமுறை தலைமுறையாக கைக்கொள்ளப்படும் இந்த மங்கலச் சடங்கு முடிந்த பிறகு, வாளும் முடியும் புனைந்து, வாழ்த்தும் புகழ்ச்சியும் முழங்க, அரசு கட்டிலில் அமர்ந்தார் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி.

ஆற்காட்டு நவாப்பின் கொடுங்கோலாட்சியை அகற்ற மாப்பிள்ளைத் தேவர் தலைமையில் முனைந்து நின்ற பொது மக்களுக்கு இந்த முடிசூட்டுவிழா சிறிது ஏமாற்றத்தை அளித்தது. எனினும் தங்களது நாட்டில் பரம்பரை மன்னராட்சி மீண்டும் ஏற்பட்டதில், அவர்களுக்கு ஒருவிதமான மன நிறைவு. தமது திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டதில் நவாப்பிற்கும் மகிழ்ச்சி. இளைஞர் முத்துராமலிங்கத்திற்கு சேது நாட்டின் மன்னராக ஆட்சியில் அமர்ந்ததில் பெருமிதம்; பூரிப்பு இன்னொருபுறம் ஆற்காட்டு நவாப்பிற்கு ஆண்டுக் காணிக்கை யாக ரூபாய் 1,75,000/-[2] அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதில் வருத்தம்: வெறுப்பு. இருந்தாலும், அந்நிய சீமையில், ஆண்டாண்டு காலமாக சிறையில் அடைபட்டு, அரசியல் கைதியாக பொழுதைக் கழிப்பதை விட, சொந்த சீமையில் ஆட்சியில் இருந்து கொண்டே, நவாப்பையும் அவர்களது பரங்கி நண்பர்களையும் இந்த புனித மண்ணிலிருந்து விரட்டிவிட ஒரு பெரும் வாய்ப்பு ஏற்பட்டது என்ற தன்னம்பிக்கை.


  1. Vanamamalai Pillai, N.. The Sethu and Rameswaram (1922), pp. 141.
  2. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 322