பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

எஸ். எம். கமால்


மன்னரது ஏற்றுமதி இறக்குமதி வியாபாரப் பட்டியலில் கைத்தறித் துணிகள், அரிசி, இஞ்சி, மிளகு, தேக்கு, பாக்கு, புகையிலை, கருப்புக்கட்டி, புளி, தெங்குப் பொருட்கள் ஆகியன காணப்படுகின்றன. இந்தப் பொருட்களைக் கொண்டு செல்லும் தோணிகளையும், படகுகளையும், பாம்பன் கால்வாயில் கடத்தி விடுவதற்காக மட்டும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 15,000/சுலிப்பணங்கள் சுங்க வருவாயாகக் கிடைத்தது.[1] இத்தகைய வாணிபத்தில் கல்கத்தாவிலுள்ள பேரட் கம்பெனி என்ற நிறுவனமும் பாண்டிச்சேரி வரதப்பச்செட்டி, காயல்பட்டினம் சேகனா லெப்பை, கீழக்கரை அப்துல்காதர் மரைக்காயர், நாகூர்சாமி செட்டி, நாகப்பட்டினம், சுப்பராயபிள்ளை, திருவாங்கூர் சேக் குட்டி என்ற பெரும் வணிகர்கள் மன்னருடன் தொடர்பு கொண்டிருந்த விபரம் தெரிய வருகிறது.[2]

இவர்களில் கிழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதிர் என்ற பெருவணிகருக்கு சிறப்பான வியாபாரச் சலுகைகளை சேதுபதி மன்னர் வழங்கி இருந்தார். இந்த வணிகரது முந்தையோர்களும் இராமநாதபுரம் மன்னருக்கு உற்றுழி உதவும் சிறந்த நண்பர்களாக விளங்கியவர்கள். ஆதலால் அப்துல் காதிர் மரைக்காயரது வாணிப பொதிகளுக்கு மறவர் சீமையில் மிகக் குறைவான சுங்கவரி (முக்கால் சதவீதம் மட்டும்) வசூலிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அவரது வணிகம் தங்குதடை இல்லாமல் தொடருவதற்கு இவ்விதம் ஊக்குவிக்கப்பட்டது.[3]


  1. R. C. Vol. 105. (1800), pp. 2615-16
  2. Revenue Consultations. Vol. 62-A, pp. 1796–97
  3. Madura District Records, Vol. 1178, pp, 470-472