பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

எஸ். எம். கமால்

அடுத்து, கர்நாடகத்தில் நவாப்பிற்கு வரவேண்டிய வருவாய் இனங்களை வசூலித்து அதில் ஆறில் ஒரு பகுதியை மட்டும், நவாப்பிற்கு அளித்து விட்டு எஞ்சிய தொகையை அவர் பட்ட கடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வியாபாரத்திற்காக இந்த நாட்டிற்கு வந்த ஆங்கிலேயர் இந்த நாட்டு அரசியலில் நேரடியாகப் பங்குகொள்ளத் துவங்கினர். நிர்வாகப் பணிகளை நிறைவேற்ற அவர்கள் தனியான நிர்வாக அமைப்பு ஒன்றினையும் (போர்டு ஆப் அசைன்டு ரெவின்யூவையும்), அதில் பணியாற்ற பேஷ்குஷ் கலெக்டர்களையும், கி. பி. 1786-ல் நியமனம் செய்தனர். கி.பி. 1787-ல் நவாப்புடன் பாதுகாப்பிற்கான உடன்படிக்கையைச் செய்து கொண்டு அவரது ஆதிக்கத்திலிருந்த அனைத்துக் கோட்டைகளையும் பராமரிப்பு செய்வதாக நடித்து தங்களது பொறுப்பில் கொண்டு வந்தனர். அதற்கான நிதி வசதியையும் நவாப்பிடம் பெற்றனர். தமிழக வரலாற்றில் ஒரு புதிய அரசியல் திருப்பத்தைச் சுட்டுகின்ற முக்கியமான ஆவணமாக[1] இந்த உடன்பாடு விளங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர்கள் நவாப்புடன் செய்து கொண்ட உடன்பாட்டினால்[2] எழுந்துள்ள குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக வரையப்பட்டது போன்ற தொடக்க வாசகங்கள் இதில் காணப்பட்டாலும், இந்த உடன்பாடு முழுக்க முழுக்க அந்நாட்டு நவாப் வாலாஜா முகம்மதலியின் இயலாத் தன்மையை பரிதாபமாக பிரதிபலிப்பதுடன், அவரிடம் எஞ்சியுள்ள அரசியல் அதிகாரங்களையும் கும்பெனியாருக்கு கொடுத்துவிடும் தான சாசனமாக உள்ளது.


இந்த உடன்பாட்டின் மூன்றாவது நிபந்தனை, ஏதாவது போர் அபாயம் ஏற்படும் பொழுது கர்நாடகப் பகுதி முழுவதையும் கும்பெனியாரே பொறுப்பு ஏற்க வேண்டியது. நவாப்பினது தனிப்பட்ட ஜாகீர்களைத் தவிர, கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கோட்டைகளின் பாதுகாப்புப் பணியும் கும்பெனியாரைச் சார்ந்தது.


நான்காவது நிபந்தனைப்படி கர்நாடகத்தில் ராணுவ தளங்களைப் பராமரிக்க நவாப் ஆண்டுதோறும் கும்பெனியாருக்கு


  1. Aitchison, Collection of Treaties, Vol. 5
  2. Ibid., Vol. 5, No. 8 L.