பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

73

பட்டவர்கள். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தேவைப்படும் தானியம் எவ்வளவு என்பதும் அரசருக்குத் தெரியும். இறை ஆயிரம் கொண்டான்' என்ற இராமநாதபுரம் அரண்மனைக் களஞ்சியத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இருப்பு குறைந்து விட்டால், மக்களுக்குத் தேவையான நெல், அல்லது அரிசியை மன்னரே தமது வியாபாரப் பிரிவு மூலமும், தமது நாகூர் ஏஜண்டு சாமி செட்டி மூலமும், தஞ்சைப் பகுதியிலிருந்து கொள் முதல் செய்து, மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருவது உண்டு. இந்த விபரங்கள் இராமநாதபுரம் சமஸ்தான 1790, 1794 ஆண்டு வரவு செலவுக் கணக்குகளிலிருந்து தெரிய வருகிறது.[1]


ஆதலால், மறவர் சீமை மக்களுக்கு உதவ கும்பெனியார்தான் தானியங்களைக் கொண்டு வந்து வழங்க வேண்டுமென்பதும் இல்லை. அந்த ஆண்டைவிட மிகவும் மோசமான முந்தைய ஆண்டுகளில் இடர்ப்பாடான சூழ்நிலைகளை சேது மன்னர்கள் சமாளிக்கவில்லையா? கும்பெனியார் தானியங்களைக் கொண்டு வந்து வியாபார முறையில், மறவர் சீமையில் விற்க முன்வரும் பொழுது, அதற்கு உரிய சுங்கத்தை செலுத்தினால் என்ன? இதற்கு ஏன் வரிவிலக்கு கோர வேண்டும்? சென்ற ஆண்டில் கைத்தறி துணிக் கொள்முதலில், ஏகபோக உரிமை கொள்ள முயன்றது போல, இப்பொழுதும் தமக்கு எதிராக தானிய வியாபாரத்திலும் கும்பெனியார் நிலை கொள்வதற்கான சூழ்ச்சி இதுவென சேதுபதி மன்னர் சந்தேகம் கொண்டார். எற்கனவே திருநெல்வேலி சீமையில் கும்பெனியாரும் இன்னும் சில பரங்கிகளும் பரவலாக தானிய வியாபாரத்தில் ஈடுபட்டி ருந்ததையும் மன்னர் அறிவார்.[2] வறட்சியைக் காரணமாகக் கொண்டு மறவர் சீமை அரசியலில் அவர்கள் நுழைவதற்கான மறைமுக முயற்சி என நம்பினார்.


மேலும், அப்பொழுதைய வறட்சி நிலை மறவர் சீமையில் மட்டும் நீடிக்கவில்லை. கும்பெனியாரது நேரடிப் பொறுப்பிலுள்ள திருநெல்வேலிச் சீமையிலும் அது பரவியிருந்தது. அங்


  1. Revenue consultations, Vol. 62 A, (1795), pp. 1296-97
  2. Secret consultations, Vol. 10 B, pp. 177-94