பக்கம்:விடுதலைப்போர், இரண்டாம்பதிப்பு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

விடுதலைப் போர்

அவர்கள் கொண்டிருப்பது, கூளத்தை, பதரை; மணியையல்ல! உயரப்பறந்து கொண்டே கீழேகிடக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் தொலைநோக்கித் திறமமைந்த கூரிய கண்படைத்த கருடனுக்குப் பார்வை படுவது, செத்த எலி, புழுத்த நண்டு, நெளியும் புழு இவற்றின் மீதுதானே தவிர, மதுரமான கனி, சுவையான பண்டம், இவற்றின் மீதல்ல. அது போலவே, அறிவுத்திறனை அளவின்றிப் பெற்றுவிட்டதாகக் கருதிக்கொண்டுள்ள இவர்களின் பார்வை அரசியலிலே, எதன்மீது படுகிறது? அரியாசனத்தின்மீதா? ஆண்மையாளருக்கேற்ற அணிவகுப்பின்மீதா? இல்லையே! பயனற்ற, பரங்கியின் பக்கநின்று பராக்குக் கூறும் பதவிமீது; அவன் அகில உலகுக்கும் தனது விசுவாசமுள்ள அடிமை என்பதை உணர்த்துவிப்பதற்குத் தந்து வரும் பட்டம், கமிட்டியிலே ஒரு இடம், ஆகிய இத்தகைய மிகமிகச் சில்லறைகள் மீதுதான் இவர்களுக்கு நோக்கம்!

இயல்புக்கு ஏற்ற எண்ணம்! பஞ்சத்தால் அடிபட்டுக் கிடந்தவனுக்குப் பழங்கஞ்சி கிடைத்தாலும் அதுவே பாலும் தேனுமாக இருப்பது போலப் பதவிப் பசி பிடித்தலையும் சிலருக்கு, இந்தப்போலி மதிப்புமட்டுமே உள்ள, சில்லறை அதிகாரங்கள் கிடைத்துவிட்டாலே போதும்! சித்தம் குளிர்ந்து விடும்! சத்தம் அடங்கி விடும். பராரிக்கூட்டத்துக்குப் பட்டாடை ஏது? கந்தலே கிடைக்கும். அதிலே ஒரு கந்தல் அழகாக இருந்தால் ஆனந்தம் அதிகமாகும்! மாட்டுக் கழுத்திலே கட்டப்படும் மணி, அந்த