பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிஞர் முருகு சுந்தரம்

கவிஞர் (முருகு சுந்தரம் அவர்கள் திருச்செங்கோட்டில் 30.12. 1930 இல் முருகேசன் - பாவாய் அம்மை ஆகியோரின் திருமகனாராகத் தோன்றியவர். முறைப்படி கல்வி பயின்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் (எம்.ஏ.) பட்டம் பெற்றார். தமிழ் மொழியிடமும், தமிழ் அறிஞரிடமும் மிகுந்த பற்றுடையவர். சென்னையில் கல்லூரி மாணவராக இருந்தபோது பாவேந்தர் பாரதிதாசனாரின் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. பாவேந்தரிடம் சில காலம் மாணவராக இருந்து பாடங் கேட்டார். திரு முருகு சுந்தரம் அவர்களின் கவிதை ஆற்றலுக்குப் பாவேந்தர் முக்கிய காரணரானார் எனல் பொருத்தும்.

இவரது கவிதைபுனையும் ஆற்றலுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாரதியார் வரலாறு.

திரு. அப்துல் ரகுமான்

திரு. அப்துல் ரகுமான் 9-11-1937இல் பாண்டிய நாட்டில் மதுரை நகரில் பிறந்தார். இவர்தம் தந்தையாரும் நூல் இயற்றும் வல்லமை கைவரப் பெற்றவர். 'மஹதி' என்ற புனை பெயரில் பல நூல்கள் எழுதியுள்ளார். தந்தை எப்படி மைந்தன் அப்படி என்பதற்கேற்ப, திரு, ரகுமானும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். இளங்கலை வகுப்பில் பயின்றகாலை மாநில முதன்மைக்காகப் பல்கலைக் கழகம் அளித்த ஜி. யு. போப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். கல்லூரியில் பயிலும்போதே ஏடுகளில் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதி வந்தார், இவற்றில் பல பரிசுகளும் பெற்றிருக்கிறார். கவியரங்குகளில் பங்கேற்று அரிய கவிதைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். தற்போது வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ஈண்டு வ. வே. சு. ஐயர் வரலாற்றினை அழகு தமிழில் -இனிய கவிதையாகத் தருகின்றார்.