பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

விடுதலை வீரர்கள் ஐவர்


வானெடுத்துப் போர்புரிந்து! வரலாற்றுப் பாதையினில்
மாளாப் புகழ்சுமந்த மாவீரர் எத்தனையோ?

என்றாலும்.--
அன்னவர்கள் தமக்குள்ளே அரவான் பலிபோலே
முன்னம்தன் னுயிர் கொடுத்து முதற்போர் தொடுத்திட்ட
மன்னவனும் தமிழ்த்தாயின் மணிவயிறு பெற்றெடுத்த
தென்னவனாம் கட்டபொம்மே என்றுசொலத்
தேவையுண்டோ ?

அன்னவன்தான் ~~
திக்கெட்டும் புகழ்வளர்க்கும் திருநெல்லைச் சீமையதன்
பக்கத்தே வடகிழக்கில், பாஞ்சாலங் குறிச்சியினில்,
சக்கம்மா தேவியவள் சந்நிதிக்கே அல்லாமல்
திக்கெட்டும் மானிடர்க்குச் சிரம் தாழ்த்தி அறியாமல்,
பேச்சில் தடுமாறிப் பேசிடினும், கைவாளின்
வீச்சில் பகைவரையே தடுமாறி விழவைக்கும்
ஊமைத், துரையோடும், உலையாத பெருவீர
மாமன் புலிக்குத்தி நாயக்கர் தம்மோடும்,
மறக்குலத்தில் பிறப்பெடுத்து மன்னவன்றன் ஆதரவில்
திருக்குமரன் போல் வளர்ந்து சிறந்திட்ட மாவீரன்
வெள்ளயனும், மந்திரியாய் வீற்றிருந்த தானாதிப்
பிள்ளையனும் பக்கலிலே பிரியாத் துணையிருக்க,
கொள்ளையரும் புல்லர்களும் குலைநடுங்க, மாற்றாரின்
உள்ளம் நடுநடுங்க , ஊரெல்லாம் தலைவணங்க,
கொட்டிவைத்த தானியத்தைக் குருவியுமே கொத்தாமல்,
கட்டிவெல்லம் வைத்தாலும் கட்டெறும்பு மொய்க்காமல்
பாஞ்சைப் பதியரசைப் பாலித்து, மக்கள் தமை
வாஞ்சையுடன் தானாண்டு வருகின்ற நன்னாளில்--