பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

விடுதலை வீரர்கள் ஐவர்

மேலிடத்தில் இத்தீர்ப்பு செல்ல, கொஞ்சம்
மேன்மையுள்ள மனிதரங்கு இருந்த தாலே
நாலுபத்தைக் குறைத்திட்டார்; அதனை ஆறு
ஆண்டாக்கிச் சிறுகருணை புரிந்தார், அந்தக்
கோலமதை ஏன்கேட்க நினைக்கின் றீர்கள்?
கோயம்புத்தூர் வெஞ்சிறையில் பட்ட பாட்டைக்
காலமெல்லாம் சொன்னாலும் முடிந்தி டாது!
காலமக ளும்சேர்ந்து அழுதாள் அங்கே!

கூழ்குடித்தார், கூழினையே குடித்தார்; கெட்ட
கொலைகாரர் குடியிருப்பில் அடைக்கப் பட்டார்;
சீழ்வந்த தையோ அவர்மேனி யெங்கும்;
செக்கிழுத்துச் செக்கிழுத்து மாண்டா ரய்யா!
ஏழ்கடலின் துன்பங்கள் அவரை அங்கே
எதிர்த்துவந்து போர்புரிந்து கொன்ற தையோ!
பாழ்ங்கிணற்றில் துடித்திட்டார்; எனினும் நெஞ்சில்
பாரதத்தின் சுதந்திரத்தை மறக்க வில்லை!

சுப்பிரமணிய பாரதிஒப் பாரி வைத்தார்
சுட்டெடுத்த துயர்நெருப்பில் வேக லானார்!

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?”

இப்படித்தான் பாரதியார் கேட்ட ழுதார்!
இவரைப்போல் அழாதவர்கள் எவரு மில்லை!
அப்படியிந் நாடெங்கும் அழுதிருக்க
ஆவேசங் கொண்டெழுந்த இளைஞர், நாட்டில்
எப்புறமும் சீற்றமுடன் இயங்க லானார்!