பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாம்பாட்டி ஒரு கீரியைக் கொண்டுவந்தான். அதுவும் அதே தட்டில் பால் குடித்தது. கீரியைப் பார்த்ததும் முதலில் ராகிக்கு, பயம் ஏற்பட்டது. ஆனாலும், பாம்பாட்டி அதைப் பத்திரமாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்ததால், ஆபத்து இல்லை என்று உணர்ந்தது.

இன்னொரு நாள் பாம்பாட்டி தன் வாயிலே ஒரு குழாயை வைத்துக்கொண்டு ராகியின் முன்னால் உட்கார்ந் திருந்தான். அவன் வாய்ப் பக்கம் இருந்த பாகம் உப்பி யிருந்தது. அதுதான் மகுடி. அதை ஊதிக்கொண்டே இடுப்பை வளைத்து அவன் இப்படியும் அப்படியும் அசைந்து கொண்டிருந்தான்.

கூடைக்குள் இருந்த ராகி எழுந்தது. இசைக்கு ஏற்றபடி அதுவும் ஆடியது. பாம்பாட்டி அதை நன்றாகப் பழக்கினான். அதற்குப் பலவிதமான வித்தைகளைக் கற்றுக் கொடுத்தான். அது எல்லா வித்தைகளையும் அழகாகச் செய்துகாட்டியது.

“இது மிகவும் அபூர்வமான பாம்பு. இந்தக் கிராமத்தில் இதை வைத்திருப்பது தண்டம். பெரிய பட்டணத்திற்கு இதைக் கொண்டு போகப் போகிறேன். இதுவும், கீரியும் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டுப் பட்டணத்துக்காரர்கள் நிறையப் பணம் தருவார்கள் ” என்றான்.

19