பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/3

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணிந்துரை

சி. சுப்பிரமணியம்

மொழி, நாகரிகம், கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமையுடையவர்கள் தென் பகுதி மக்கள். சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இவ்வொருமைப்பாடு வேரூன்றி இருந்தது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வொற்றுமை உணர்ச்சி குறைந்து போய்விட்டது. காலம் செய்த இவ்விடையூற்றை நீக்கி, தென் பகுதி மக்களிடையே ஒரு பகுதியினரின் கருத்துக்கள், மற்றப் பகுதியினருக்கும் பரவும் வகையில் தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் பாடுபட்டு வருவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

1955-இல் சென்னையில் நமது நாட்டின் தலைமை அமைச்சர் திரு. ஜவகர்லால் நேரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட், நாள் தோறும் நல்ல முறையில் முன்னேறி வருவது மிகவும் பாராட்டுதற்குரியது. இந்நிறுவனம் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் வகையிலே பல புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றது. குறிப்பாகத் திருக்குறள் போன்ற நூலை, கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பது மிகவும் போற்றுதற் குரியது.

கருத்துப் பரிமாற்றத்தில்தான் மனித இனத்தின் அறிவு வளர்ச்சியும் உலக அமைதியும் அடங்கியிருக்கின்றன. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டு தென் பகுதியிலே உள்ள சிறந்த நூல்களைக் குறைந்த விலையிலே மற்ற மொழியாளரும் அறிந்துகொள்ளும் வகையிலே ஆக்கப்பணி புரியும் டிரஸ்டின் சேவை மேலும்மேலும் வளர்ந்து பயன்படும் என நினைக்கிறேன். புத்தகங்கள் வெளியிடுவதோடு மட்டு மல்லாது கருத்து அரங்கிற்கு ஏற்பாடு செய்வதிலும், ஆராய்ச்சி வேலை களிலும் இப்புத்தக டிரஸ்ட் ஈடுபட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக, குழந்தைகளின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி நடத்தியிருப்பது நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன். புதிதாக அவர்கள் தமிழில் வெளியிட இருக்கும் நூல்கள் தமிழ்ப் பெருமக்களிடையே பெரும் ஆதரவோடு திகழும் என்று எண்ணுகிறேன்.

இத்துறையில் அவர்கள் மேலும் பல சிறந்த நூல்களை எளிய விலையில் வெளியிட்டுத் தென் பகுதி மக்களுக்கும், நாடு முழுமைக்கும் பயன்படும் வகையில் முன்னேற இறைவன் அருள்வானாக.

சி.சுப்பிரமணியம்.