பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழுரை - அகிலன் பெரும்பாலும் ஆங்கிலம் படித்த மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே பத்திரிகைகளில் சிறு கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆனந்த விகடன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகித் தமது பத்திரிகையான கல்கியை நடத்தி வந்தார். அப்போதுதான் தமிழ் வாசகர் உலகத்துக்கு விந்தன் எழுத்தாளர் என்ற முறையில் அறிமுகமானார். கல்கியில் குழந்தைகள் பகுதிக்கு அவ்வப்போது எழுதி வந்த விந்தன், தமது பாலும் பாவையும் என்ற நாவலின் வாயிலாகத் தமிழ் வாசகர் உலகையே வியப்புறச் செய்தார் என்று கூற வேண்டும். "யார் இந்த விந்தன்? என்று பலரைக் கேட்க வைத்த நாவல் அது. கதையின் கருப்பொருள், எழுத்து, நடை, உருவம் எல்லாவற்றிலும் ஒரு புதுமை தெரிந்தது. அந்த நாவலில் இலக்கியப் படைப்புக்கு வேண்டிய உயிர்த் துடிப்புக் காணப்பட்டது. அவரைப் பற்றி விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்தன. அப்போது இளைஞராக இருந்த அவர் திரு. மாசிலாமணி முதலியார் நடத்தி வந்த தமிழரசு ஆனந்த போதினி முதலிய பத்திரிகைகளில் அச்சுக்கோப்பவராகப் பணியாற்றினாராம். ஆனந்த விகடனிலும் அதே வேலையில் இருந்து விட்டுப் பிறகு கல்கி அச்சகத்தில் அச்சுக்கோப்பு வேலைக்கு வந்திருக்கிறார். பலரது எழுத்துக்களை ஆர்வத்தோடு படிப்பதில் ஆர்வம் காட்டிய அவர், அந்தக் காலத்தில் தாமே ஓர் எழுத்தாளராக மலரப் போவதை அறிந்திருப்பாரோ என்னவோ!