பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உறவினர் எதற்கு?

111

பொழுது விடிந்தது. அந்த வாலிபன் என்னிடம் சொல்லிக் கொண்டு போக வந்தான்.

அப்போது, “உங்கள் பெயரென்ன?” என்று அவன் என்னைக் கேட்டான்.

‘கோபாலசாமி’ என்றேன்.

உடனே தன் பைஜாமாவின் ‘பாக்கெட்’டிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்தான். அதில் என் பெயரைக் குறித்துக் கொண்டான். கதவைப் பார்த்து இலக்கத்தையும் குறித்துக் கொண்டான். தெருவின் பெயர் அவனுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கிறது; அதையும் கீழே எழுதிக் கொண்டான். ‘தாங்ஸ்’ என்று சொல்லிவிட்டுத் தெருவை நோக்கி நடந்தான்.

***

வன் வந்துபோன நாலைந்து மாதங்களுக்குப் பிறகு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், அன்றிரவு நான் அவனுக்குப் போட்ட ‘தண்ணீர் விட்ட சாத’த்தைப் பற்றிப் பிரமாதமாக எழுதி யிருந்தான். நானும் என் வாழ்நாளிலே எத்தனையோ உறவினர்களுக்கு விருந்து வைத்திருக்கிறேன். கடன் வாங்கியாவது விதவிதமான கறி வகைகளுடன் பலகாரம் பட்சணங்களுடனும் பரிமாறியிருக்கிறேன். அவர்களில் ஒருவராவது இதுவரை என் விருந்தை மெச்சி ஒரு வார்த்தை பேசியது கிடையாது. ஆனால், இவனோ? கேவலம் தண்ணீர் விட்ட சாதத்தை இவ்வளவு பிரமாதப்படுத்தி எழுதியிருக்கிறானே? - ஆமாம்; வாழ்க்கையில் யாருமே தமக்கு மேற்பட்டவர்களை உபசரிப்பதற்கும், தமக்குக் கீழ்ப்பட்டவர்களை உபசரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது!

அத்துடன் அவன் ‘ஜேம்ஸ் தாம்ஸன்’ என்றும் தற்சமயம் இந்திய விமானப் படையில் வேலை பார்க்கிறானென்றும் மேற்படி கடிதத்திலிருந்து தெரிய வந்தது. இன்னும் வயிற்றுக் கவலையின் காரணமாகத் தன்னுடைய தேசபக்தியை விலைக்கு விற்ற விதத்தைப் பற்றியும் அவன் கடிதத்தில் விவரித்திருந்தான்.

பெண்ணைப் பெற்ற என் மனம் அவனைப் பற்றி எண்ணிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. அவன் மட்டும் கிறிஸ்துவனாக இல்லாமலிருந்தால்? ஒருவேளை ரங்கா அவனால் வாழ்ந்தாலும் வாழலாமல்லவா? தேச விடுதலையில் ஆர்வங் கொண்ட அவன், சமூக விடுதலையிலும் ஆர்வங் கொண்டவனாக இருப்பானல்லவா?