பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒரே உரிமை

ங்கள் கிராமத்தில் எனக்குக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. சென்றதை மாத அறுவடையின் போது நான் அங்கே போயிருந்தேன். வயலில் மும்முரமாக வேலை நடந்துகொண்டிருந்தது. களத்து மேட்டில் நின்றபடி நான் வேலையாட்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவன் என்கவனத்தைக் கவர்ந்தான். அதற்கு முன்னால் அவனை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது-எங்கே பார்த்திருப்போம்?

ஆம், அந்தச் சம்பவம் என் நினைவுக்கு வந்து விட்டது. அவன் பெயர் சோலையப்பன். சென்ற வருடம் சித்திரை மாதம் நான் கிராமத்துக்கு வந்திருந்தபோது, என் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவருடைய மனைவியாருக்கு முன் யோசனையுடன் காரியம் செய்வதில் அலாதி ஆவல். புது இடம் என்பதற்காக நான் எங்கே கூச்சப்பட்டுக் கொண்டு கொஞ்சமாகச் சாப்பிட்டுவிடப் போகிறேனோ என்று அந்த அம்மையார் எனக்கு முன் கூட்டியே இரண்டு வேளைக்கு ஆகக் கூடிய சாதத்தை ஒரே வேளையில் படைத்துவிட்டார். நானும் என்னால் ஆனவரை ‘ஒரு கை’ பார்த்தேன்; என்ன பார்த்தும் என்னால் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட முடியவில்லை. பாதிச் சாதம் அப்படியே மிஞ்சிப் போய் விட்டது. சொந்த வீடாயிருந்தால் கணவன் என்னதான் தீராத நோய்க்கு ஆளாகியிருந்தாலும் அவனுடைய எச்சில் சாதத்தைச் சாப்பிடுவது ‘பதிவிரதா தர்ம’ங்களில் ஒன்று என நினைக்கும் அப்பாவி மனைவி ஒருத்தி இருப்பாள். விருந்துக்கு வந்த வீட்டில் அம்மாதிரி யார் இருக்கிறார்கள்? ஆகவே நான் அந்த இலையைத் தூக்கிக் கொண்டு, நாயைத் தேடிக் கொண்டு தெருவை நோக்கி நடையைக் கட்டினேன்.

எனக்கு எதிரே வந்த நண்பரின் மனைவி, “என்ன காரியம் செய்து விட்டீர்கள்! உங்களை யார் இலையை எடுக்கச் சொன்னார்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

அன்னதானம் செய்வதிலுள்ள புண்ணிய மனைத்தும் எச்சில் இலையை எடுத்துப் போடுவதில்தான் அடங்கியிருக்கிறது என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. என்னுடைய செய்கையால் அந்த மகத்தான புண்ணியம் தனக்குக் கிடைக்காமல் போய் விட்டதே என்பதில்தான் அந்த அம்மாளுக்கு எவ்வளவு வருத்தம்!