பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

விந்தன் கதைகள்

ஒரு சமயம் அவள் ஒருவார காலமோ இரண்டு வார காலமோ, ஏதோ ஓர் ஊருக்குப் போய்த் தங்கியிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. அப்போது எனக்கு அவள் என்ன எழுதியிருந்தாள், தெரியுமா? “உங்களை விட்டுவிட்டு வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டுவிட ஓடுகிறேனோ என்று நீங்கள் தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். அம்மாதிரி ஒருநாளும் நடக்கவே நடக்காது” என்றல்லவா எழுதியிருந்தாள்?

அதுதான் போகட்டும்; அவள் மனத்துக்கு என்ன வந்தது? அந்தப் பாழும் மனம் எப்பொழுதும் என்னிடமே இருக்கிறதென்று அவளே எழுதியிருந்தாளே!-ஒரு வேளை அதனாலேயே தன் மனம் இன்னும் தன்னை வந்து அடைய வில்லை என்று அவள் அவ்வாறு எழுதியிருப்பாளோ?

கடைசியில், சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமாம் சந்தர்ப்பம்! எந்தக் காதல்களாவது எந்தச் சந்தர்ப்பத்தையாவது எதிர்பார்த்துக் கொண்டு எங்கேயாவது காத்திருப்பதுண்டோ?-அழகுதான்

***


முதலிலேயே நான் அவள் மீது சந்தேகம் கொண்டதுண்டு. ஏன் தெரியுமா? அவளை நான் காதலிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. முக்கியமாக, அவள் பெரும்பாலான பெண்களைப் போல என் உடலை மட்டும் வளர்க்கக் கூடியவளாயில்லை; உணர்ச்சியையும் வளர்க்கக் கூடியவளாயிருந்தாள்.

ஆனால் என்னை அவள் காதலிப்பதற்கு எந்த விதமான காரணமும் இருக்கவில்லை.

என்னிடம் அழகும் இல்லை; ஜசுவரியமும் இல்லை; பேரும் இல்லை; புகழும் இல்லை.

“இவையெல்லாம் இல்லாத காதல் என்ன காதல்?” என்று ஒருநாள் அவளைக் கேட்டேன்.

அவள் சொன்னாள், “அதுதான் நிஜக் காதல்” என்று. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. “இது நிஜமா?” என்று கேட்டேன்.

“நிஜம்தான்” என்றாள்.

பின் அந்த நிஜக் காதலுக்கு இன்று ஏன் இந்த கதி?