பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பிரார்த்தனை செய்வது கட்டாயமாகிறது; கூடைக்காரியாக வியாபாரம் செய்கிறவள் அரிச்சந்திரனைப் பின்பற்ற விரும்பித் தோல்வி அடைந்த பின் புதிய வழி காண்கிறாள்.

பொருளாதார ஏற்றத் தாழ்வு என்ன என்ன தீமை செய்கிறது என்பதை ஆசிரியர் பல இடங்களில் படம் பிடித்துக் காட்டுகிறார். குழந்தைகளின் வாழ்க்கை முதல் காதலர்களின் வாழ்க்கை வரையில் எல்லோருடைய வாழ்க்கையையும் பொருளாதார நிலைமை எப்படி எப்படி ஆட்டிவைக்கிறது என்பதை அவருடைய கதைகள் தெளிவாக்குகின்றன. காதல் எதன்மேல், எதுவரையில் என்றெல்லாம் கதைகள் விளக்குகின்றன. கவிதையிலே காவியத்திலே கதைகளிலே சாகாத காதல் வாழ்க்கையிலே பணப் போரில் சாவதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவது போற்றத்தக்கது. வாழ்க்கையில் உள்ள இத்தகைய உண்மைகளை மறைப்பது குற்றம் என்று ஆசிரியர் உணர்ந்து எழுதுவதற்காக, உலகம் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

இப்படிப்பட்ட சிறந்த கதைகளைத் தெளிவான எளிய தமிழில் உணர்ச்சி வேகத்துடன் எழுதிக் கலைத்தொண்டு புரியும் “விந்தன்” முயற்சி மேன்மேலும் வளரவேண்டும். அவர் ஓயாமல் படித்துவரும் இந்த ‘உலகம்’ என்னும் புத்தகம் நாள்தோறும் புதிய புதிய உண்மைகளை அவருக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.

சென்னை
2-1–50