பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதவு திறந்தது!

129

ஆம்; இந்த உலகத்தில் யாருக்குமே எதுவுமே நிச்சயமில்லைதான்; அப்படித்தான் வேதாந்திகள் சொல்லுகிறார்கள்.

ஆனால், அந்த வேதாந்திகள் தங்குவதற்கு மட்டும் சகல செளகரியங்களும் பொருந்திய எத்தனையோ மடங்கள் சர்வ நிச்சயமாக இருக்கின்றன; சாப்பாட்டு விஷயத்திலோ சாம்ராஜ்யாதிபதிகள் கூட அவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும்!

இத்தனைக்கும் அத்தனை செளகரியமான வாழ்க்கைக்கு அவர்களுடைய உடலும் ஊனும் அணுவளவாவது தேய்வதில்லை; உள்ளம் நொந்து உயிரும் ஓரளவாவது ஒடுங்குவதில்லை.

மோட்ச சாம்ராஜ்யத்தில் தாங்கள் வகிக்கப் போகும் பதவிக்காக, முன் கூட்டியே அவர்களுக்குக் காணிக்கை என்ற பெயரால் லஞ்சம் கொடுத்துவைக்கும் மகானுபாவர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, அந்த வேதாந்திகளுக்கு இந்த அநித்தியமான உலகத்தில் எதைப் பற்றித்தான் என்ன கவலை?

ஆனால், மேற்கூறிய அந்தப் பரிதாப ஜீவனுக்கோ?

எத்தனையோ கவலைகள்!

விடிந்தால் வேலை கிடைக்குமா என்று கவலை; வேலை கிடைத்தால் கூலி கிடைக்குமா என்று கவலை; கூலி கிடைத்தால் சோறு கிடைககுமா என்று கவலை; அதுவும் கிடைத்தால் ‘அப்பாடி!’ என்று சற்று நேரம் விழுந்து கிடக்க எங்கேயாவது கொஞ்சம் இடம் கிடைக்குமா என்று கவலை.

ஆம்; அவனுடைய வாழ்க்கை அந்த லட்சணத்தில் தான் இருந்தது. “குடை ரிப்பேர், குடை ரிப்பேர்!” என்று தெருத் தெருவாய்க் கூவிக்கொண்டு போவான்; கூப்பிட்ட வீட்டுக்குள் நுழைவான்; கொடுத்த வேலையைச் செய்வான்; “கூலி என்னடா வேண்டும்?” என்றால், “கொடுக்கிறதைக் கொடுங்க, சாமி!” என்பான்.

சிலரிடம் அவன் வேலை செய்த கூலிக்காக வம்புக்கு நிற்பதும் உண்டு; மல்லுக்கு நிற்பதும் உண்டு; எப்படித்தான் நின்றாலும் ஏமாந்து போவதும் உண்டு.

கிடைத்த காசுக்கு ஏற்றவாறு அவன் தானே சமைத்துச் சாப்பிடுவது வழக்கம். எங்கே?-வீதியோரங்களில் இருக்கும் நடைபாதையிலே!

வி.க. -9